மலையகத்தில் குருடர்களே அரசியல் செய்கின்றனர் - ரமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு





 (க.கிஷாந்தன்)

 

" கண்கள் இருந்தும், பார்வையற்றவர்களாக வலம்வரும் சில அரசியல்வாதிகளே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என விமர்சிக்கின்றனர். இப்படியானவர்களுக்கு சொல்லில் அல்லாமல் நாம் செயல்கள் ஊடாகவே பதிலளித்துவருகின்றோம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். 

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று (20.02.2022) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

 

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்குவதற்கு சுமார் ஆயிரம் டொன் மாவு தேவை. இவ்வாறு மானிய விலையில் கோதுமை மா வழங்கப்படுவதால் அரசுக்கு மாதம் ஆயிரத்து 200 லட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. வருடம் சுமார் 1400 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. 

 

அரசுக்கு நிதி பற்றாக்குறை உட்பட பல பிரச்சினைகள் உள்ளன. அப்படி இருந்தும் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த அரசு நேசக்கரம் நீட்டுகின்றது. இதையும்கூட சிலர் இன்று விமர்சிக்கின்றனர். அமைச்சரவைக்கு சென்றது குறித்தும் நகைச்சுவையாக கதைக்கின்றனர். நல்லாட்சியின்போது 50 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றனர். அது நடந்ததா? இல்லை.

 

அதேவேளை, ஜீவன் தொண்டமான் ஒன்றுமே செய்யவில்லையென சிலர் விமர்சிக்கின்றனர். அவர்கள் நிச்சயம் குருடர்களாகவே இருக்க வேண்டும். சுயதொழில் ஊக்குவிப்பு உட்பட மலையகத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.  மக்களை அடிப்படையாகக்கொண்டே நாம் செயற்படுகின்றோம். மாறாக கட்சி பேதம் எம்மிடம் இல்லை. " - என்றார்