பாடசாலை அதிபர் இடமாற்றத்தை கண்டித்து வீதிக்கு இறங்கிய மாணவர்களும், பெற்றோர்களும் !




 


பாடசாலை அதிபர் இடமாற்றத்தை கண்டித்து வீதிக்கு இறங்கிய மாணவர்களும், பெற்றோர்களும் !


நூருள் ஹுதா உமர்



அதிபரின் தற்காலிக இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரி சம்மாந்துறை கல்விக்கோட்டத்தின் கீழுள்ள கமு / சது / ஜமாலியா வித்தியாலயத்தின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றை இன்று (01) காலை முன்னெடுத்தனர். 


இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெற்றோர், அன்றாடம் கூலித்தொழிலை தங்களது ஜீவனோபாயமாக கொண்டு வாழ்க்கை நடாத்தும் . பெற்றோர்களை அதிகமாக கொண்ட பிள்ளைகள் கல்வி கற்கும் இப்பாடசாலையானது சுமார் 40 வருட வரலாற்றைக்கொண்டு காணப்படுகின்றது . இப்பாடசாலைக்கு அவ்வப்போது பல அதிபர்கள் நியமனம் பெற்று வந்த போதிலும் இப்பாடசாலையானது கல்வியிலோ அல்லது பௌதீக அபிவிருத்தியிலோ முன்னேற்றம் காணவில்லை . இந்நிலையில் சுமார் இரண்டரை வருடத்திற்கு முன்னர் இப்பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் அதிபரான எம்.எம் . மஹிஸா பானு எனும் அதிபர் முதலில் பெற்றோருக்கும் பாடசாலைக்குமான தொடர்பை ஏற்படுத்தி கல்வி மற்றும் பௌதீக அபிவிருத்தியில் பாரிய மறுமலர்ச்சியை மிக குறுகிய காலத்திற்குள் ஏற்படுத்தனார் . 


தரம் 5 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 2020 ஆண்டு ஒரே தடவையில் 03 மாணவர்களை சித்தி பெற வைத்து வரலாற்று சாதனை படைத்தார் . எனவே , இவ்வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத சில தீய சக்திகளின் செயற்பாட்டினால் , எங்களுடைய அதிபரை தற்காலிக இடமாற்றம் செய்ய கல்வி அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசிலனை செய்து , இவ்விடமாற்றத்தை இரத்துச் செய்து மீண்டும் எங்களுடைய அதிபரை இப்பாடசாலைக்கு நியமிக்குமாறு கேட்டு கொண்டனர். 


மேலும் கருத்து வெளியிட்ட பெற்றோர் , எங்களுடைய அதிபரை மீண்டும் நியமிக்காத பட்சத்தில் எங்கள் பிள்ளைகளின் விடுகைப் பத்திரத்தை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி துறை உயரதிகாரிகளை கேட்டுக் கொண்டதுடன் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கான பெற்றோர்களின் கையப்பமும், கோரிக்கையும் அடங்கிய மகஜரை சம்மாந்துறை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ. சபூர் தம்பியிடம் கையளித்தனர்.