உலக தாய்மொழி தினம்




 


21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.


✍ உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்துவிட்டன. எனவே, அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, மக்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி 'வங்க மொழி இயக்கம்' உருவானது. இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. கடந்த 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது