அரை நூற்றாண்டு சேவைக்கு கௌரவம்




 



(அஸ்லம் எஸ்.மௌலானா)


அரை நூற்றாண்டு காலமாக கல்வி, கலாசார மற்றும் சமூகப் பணியாற்றி வருகின்ற அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதல்வருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனியை பாராட்டி கௌரவிக்கும் வைபவமும் அவரது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (06) சாய்ந்தமருது லீ மெரிடியன் மணடபத்தில் இடம்பெற்றன.


நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் மெளலவி எம்.எம்.கமர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காஸிம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஆரிப் சம்சுதீன் உள்ளிட்டோர் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.


லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.வை.எம்.சித்தீக், பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.சலீம், காத்தான்குடி பலாஹ் அறபுக் கல்லூரியின் செயலாளர் மௌலவி எம்.எச்.எம்.புஹாரி, அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் ஐ.எல்.எம்.ஹாஷிம் உள்ளிட்டோர் சிறப்புரை, நயவுரை மற்றும் கருத்துரைகளை நிகழ்த்தினர்.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், திடீர் சுகவீனம் காரணமாக வருகை தர முடியவில்லை எனத் தெரிவித்து, ஆசிச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார். அதனை கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதிர் நிகழ்வில் வாசித்துக் கையளித்தார்.


மேலும், மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனியின் 50 வருட கல்வி, சமூகப் பணியின்போது அவர் சேவையாற்றிய அறபுக் கல்லூரிகள், பாடசாலைகள், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட உலமா சபைகள்,  பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் அவற்றின் பிரதிநிதிகளால் நினைவுச் சின்னங்கள், பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.