முஸ்லிம் ஆசிரியைக்கு நடந்த அநீதியை மூடிமறைத்து பொய்யான செய்திகளை பரப்பிய ஊடகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை




 


முஸ்லிம் ஆசிரியைக்கு நடந்த அநீதியை மூடிமறைத்து பொய்யான செய்திகளை பரப்பிய ஊடகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை : சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவை. 


நூருல் ஹுதா உமர் 


சண்முகா வித்தியாலயத்துக்கு சென்ற முஸ்லிம் ஆசிரியை "முகத்தை முழுவதுமாக" மூடிச் சென்றார் என்று நிரூபித்தால் டான்ரீவி, தினக்குரல் ஆகிய நிறுவனங்களுக்கு தலா பத்துலட்சம் (1000000/=) ரூபாய்களை சன்மானமாக வழங்கவுள்ளேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, திருகோணமலை சண்முகா வித்தியாலய முஸ்லிம் ஆசிரியை "முகத்தை முழுவதுமாக மூடும்" ஆடையை அணிந்து சென்றார்கள் அதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது என்று நிரூபிக்கும் பட்சத்தில் நாங்களும் அதனை கடுமையாக எதிர்ப்போம் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம். இதனை நிரூபிக்க தவறும் இரு ஊடகங்களும் பொய் செய்திகளை பரப்பியதற்காக பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம். 


இந்த விடயத்தை எதிர்க்கின்ற தமிழ் மக்களை திசைதிருப்புவதற்காகவே நீங்கள் இப்படி செயல்படுகின்றீர்கள் என்பது எங்களின் கருத்தாகும். அந்த முஸ்லிம் ஆசிரியை சண்முகா பாடசாலைக்கு முகத்தை முழுவதுமாக மூடிச் சென்றாரா என்பதை அந்த பாடசாலையின் முன்னால் உள்ள கடையில் பொறுத்தப்பட்டுள்ள வீடியோ கமராவில் பார்த்து தெளிவை பெற்றுக் கொள்ளலாம் என்பதை அந்த ஊடகங்களுக்கு தெரிவித்து கொள்கின்றேன். அத்துடன் பொய் செய்திகளை பரப்பிய ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளேன். சமூகத்தின் மீது கரிசனைகொண்ட சட்டத்தரணிகள் இதற்கு உதவவும் ஆலோசனை வழங்கவும் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் அவர்களுக்கான செலவு தொகை செலுத்துவதற்கு நான் தயாராவும் உள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.