.பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக கையெழுத்து





 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக ஞாயிற்றுக்கிழமை(20) அன்று   அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

காரைதீவு பொதுச்சந்தை மற்றும் கல்முனை பகுதியில்  பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி  குறித்த  கையெழுத்து  போராட்டமானது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி ஏற்பாட்டில் இடம்பெற்றன.

காரைதீவு பொதுச்சந்தைக்கருகில் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்   காரைதீவு தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமைதாங்கியதுடன் கல்முனையில் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதன் போது அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,  மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ,மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர்  தி.சரவணபவன் ,  தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலாளர் நாயகமும் தற்போதைய உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் , இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் எஸ்.சேயோன் ,தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் கல்முனை மாநகர சபை  முன்னாள் எதிர்கட்சி தலைவருமான குஞ்சுத்தம்பி ஏகாம்பரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்களான அழககோன் விஜயரட்ணம் சோ.குபேரன் தி.இராசரட்ணம், சந்திரசேகரம் ராஜன்,சமூக சேவகர்  தாமோதரம் பிரதீபன் உள்ளிட்ட பிரமுகர்கள்  கையெழுத்திட்டனர்.

அத்துடன் உங்கள் ஒவ்வொருவரினதும் கையொப்பங்களும் உங்கள் பாதுகாப்புக்கானதும் உங்கள் சந்ததியின் பாதுகாப்புக்கானது ஆகும் என இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தத்தமது உரையில் குறிப்பிட்டனர்.