ஜனாஸா அறிவித்தல்!
-------------------------------------------------
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஆயுட்கால பிரதித் தலைவரும், அதனது ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமான சட்டத்தரணி. அல்ஹாஜ். AL. அப்துல் ஜவாத் BA அவர்கள் இன்று 2022.02.02 ஆம் திகதி புதன் கிழமை காலை 06:45 மணியளவில் வபாத்தானார்கள்.
பெருந்திரளான மக்கள் இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு, அவரது பங்கையும் பணியையும் கண்ணியப்படுத்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் கணிசமானளவு வெளியூர்களைச் சேர்ந்தோரும் பங்கேற்றிருந்தனர்.
ஜவாத் சேர் (BA, LLB) காத்தான்குடியின் ஊர்த் தலைவர்களுள் ஒருவர். காத்தான்குடியின் உள்ளும் புறமுமாக, ஒவ்வொரு முக்கிய விடயத்திலும் நெருங்கி வாழ்ந்தவர்; இயங்கியவர். சொந்த வாழ்க்கையைப் பார்க்கிலும், பொது வாழ்க்கைக்கே அதிக நேரத்தை செலவிட்டவர்.
நீண்ட நெடுங்காலமாக பல்வேறு தலைமைப் பொறுப்புகளை ஏற்று, சமூகப் பணியில் முழுமூச்சாக இயங்கியவர் அவர். மக்கள் நலனிலும் பொதுப் பணிகளிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு இயங்கினார்.
கிழக்கு மாகாண மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களது நலனினும் முன்னேற்றத்திலும், அவரது பங்களிப்பு மிகவும் சிறப்பானது. பல உள்நாட்டு வெளிநாட்டு தூதுக்குழுக்களோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காளராகவும் இருந்தார். மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் தலைமையில் புலிகளோடு பேச சென்னைக்குச் சென்ற குழுவிலும் இவர் அங்கம் வகித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹூம் ஷஹீத் அஹமட்லெப்பை அவர்கள் இவரது மூத்த சகோதரர். தனது மூத்த சகோதரரோடு இணைந்து, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தை உருவாக்கி வளர்ப்பதில் ஜவாத் சேர் முன்னின்று உழைத்தார். சம்மேளனத்தின் ஆயுட்கால பிரதித் தலைவராகவும் இருந்தார். ஏனைய பல ஊர் சம்மேளனங்களுக்கு அது முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் அமைந்தது.
அச்சமும் உயிராபத்தும் நிறைந்த போர்க் காலத்தில், அவரது துணிவான-நிதானமான பணி மிகவும் காத்திரமாக அமைந்தது. மிக நெருக்கடியான காலத்தில் அவர் களத்தில் இருந்து இயங்கிய, வழிநடத்திய வரலாற்றுப் பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது.
காத்தான்குடி மத்திய கல்லூரியில் அவர் அதிபராக இருந்த காலத்தை, அவ்வூரவர்கள் பொற்காலமாகக் கருதுகிறார்கள். காத்தான்குடி பிரதேச சபை, நகர சபையாக மாறியபோது, அவர்தான் நகர சபையின் முதலாவது தவிசாளராகவும் தெரிவானார். உடல்நலக் குறைவு காரணமாக சொற்ப காலத்தில் அப்பதவியை இராஜினாமா செய்ய வேண்டி வந்தது.
நெருக்கடி நிறைந்த காலத்தில் அப்போதிருந்த சட்டத்தரணிகள், அப்பாவி மக்களைக் காப்பாற்ற முன்வரவில்லை என்ற கசப்பான அனுபவம் அவரை ஆழமாகப் பாதித்தது. ஊரில் ஒரு சட்டத்தரணி கூட இல்லையே என்ற ஆதங்கத்தில், தானே ஒரு சட்டத்தரணியாக மாறினார். காத்தான்குடியின் முதல் சட்டத்தரணியும் முதல் கலைத்துறைப் பட்டதாரியும் அவரே.
அவரது அரசியல் மற்றும் ஒருசில முக்கிய தீர்மானங்களில் எம்மைப் போல சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தன. எது எவ்வாறாயினும் சமூக, சன்மார்க்க, அரசியல் பணிகளில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதை யாரும் மறுதலிக்க முடியாது.
காத்தான்குடி அவரது இழப்பின் காரணமாக, ஒரு முக்கிய இடைவெளியை உணர்கிறது.
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தை அருள்வானாக.
Post a Comment
Post a Comment