கிங் அப்துல்லா விமான நிலைய தாக்குதல் 16 பேர் காயமம்,3 பேரின் நிலைமை கவலைக்கிடம்




 


ரியாத்:


ஏமன் நாட்டில் அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளது. இப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதிஅரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் உள்ள விமான நிலையம், எண்ணை நிறுவ னத்தை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 3 பேர் பலியானார்கள்.

இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் சவுதிஅரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

சவுதிஅரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜிசான் நகரில் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட டிரோன் மூலம் (ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தப்பட்டது. விமானத்தில் புகுந்த டிரோனை இடைமறித்து அழித்த போது ஏற்பட்ட வெடிப்பில் 16 பேர் காயம் அடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வெடிகுண்டு நிரப்பப்பட்ட டிரோன் ஏமன் தலைநகர் சனா விமான நிலையத்தில் இருந்து ஏவப்பட்டதாக சவுதி அரேபியா பாதுகாப்பு படை குற்றம்சாட்டி உள்ளது.