(க.கிஷாந்தன்)
இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது. மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
நுவரெலியா – நானுஓயா பெரக்கும்புர பகுதியில் 30.01.2022 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" உரிய மாற்று திட்டங்கள் எதுவுமின்றியே சேதனை பசளைமூலம் விவசாயம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. அதாவது உலகில் இயற்கை விவசாயம் செய்யும் முதல் நாடு இலங்கை, முதல் தலைவர் கோட்டாபய ராஜபக்ச என்ற நாமத்தை வெல்வதற்காகவே அவசர அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. எவ்வித தூரநோக்கு சிந்தனையும் இன்றியே இந்த முடிவு எடுக்கப்பட்டது. வயலில் இறங்காதவர்களே திட்டத்தை செயற்படுத்த ஆலோசனை வழங்கினர். இறுதியில் இன்று விவசாயம் சீரழிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வீதிக்கு வந்துள்ளனர்.
நாட்டில் இன்று பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மூன்று விடயங்களிலேயே அரசு தங்கியுள்ளது. ஒன்று எப்படியாவது எண்ணெய் இறக்குமதி செய்வது. இரண்டாவது கடன் பத்திரத்தை நிராகரித்து கொள்ளாமல் தக்கவைப்பது. மூன்றாவது கடன் செலுத்துவதற்கான தவணையை நீடித்துக்கொள்வது. இந்த மூன்றையும்தவிர நாடு பற்றியோ அல்லது மக்கள் பற்றியோ அரசுக்கு வேறு சிந்தனை இல்லை. எதையாவது விற்பனை செய்தாவது நாட்களை நகர்த்துவதுதான் திட்டமாக உள்ளது.
எனவே, இந்த நாட்டில் அரசியலை மாற்றாமல் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது. எனவே, மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும்.
அதேவேளை, விவசாயத்துறை அமைச்சர் இன்று வயல்களுக்கு சென்று, நடிகர்களை தயார்செய்துவிட்டு நாடகம் அரங்கேற்றுகின்றார். சேதனை பசளை திட்டம் வெற்றியென பிரச்சாரம் செய்கின்றார். " -என்றார்.
Post a Comment
Post a Comment