கல்முனையில் உள்ளூர் கைத்தொழில் கண்காட்சி;




 


கல்முனையில் உள்ளூர் கைத்தொழில் கண்காட்சி; கிழக்கு ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்



(அஸ்லம் எஸ்.மௌலானா)


கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை திணைக்களம் மற்றும் கைத்தொழில் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் இணைந்து ஒழுங்கு செய்துள்ள உள்ளூர் கைத்தொழில் உற்பத்திகளின் கண்காட்சி மற்றும் வர்த்தக சந்தை, கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இன்று புதன்கிழமை (12) பிற்பகல் ஆரம்பமானது.


கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்கள், பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார்.


கைத்தறித் துணிகள், உள்நாட்டு ஆடைகளின் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பற்றிக் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சின் ஆலோசனை, வழிகாட்டலில் இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வர்த்தக சந்தையில் பெரும் எண்ணிக்கையிலான உற்பத்திகள் அடங்கிய காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.


இங்கு கைத்தறி துணிகள், ஆடைகள், உள்ளூர் உணவுப் பண்டங்கள், தும்பு மூலமான உற்பத்திகள், மற்பாண்டங்கள் என பல்வேறுபட்ட உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, சந்தைப்படுத்தப்படுகின்றன.  



ஒவ்வொரு காட்சி கூட்டத்தையும் பார்வையிட்ட ஆளுநர் அனுராதா யஹம்பத், உற்பத்திகள் பற்றிய விபரங்களை கேட்டறிந்து, பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் கைத்தறித் துணிகள் மற்றும் ஆடைகள் பலவற்றை கொள்வனவு செய்தார்.


உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்ட ஆளுநர், கிழக்கு மாகாணத்தில் கைத்தறி உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு தாம் முன்னிற்பதாகவும் கைத்தறி உற்பத்தியாளர்கள் தமது தொழில்களை நவீன வசதிகளை கொண்டு விருத்தி செய்வதற்கு தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும் என்றும் இதன்போது உறுதியளித்தார்.


இந்நிகழ்வில் பற்றிக் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சு, கிழக்கு மாகாண சபை மற்றும் மாகாண கிராமிய தொழிற்துறை திணைக்களம், மாவட்ட கைத்தொழில் திணைக்களம் உட்பட மற்றும் பல அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் வர்த்தகர்கள், பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.