சாய்ந்தமருதில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை முன்னெடுக்க நலன்புரி அமைப்பு




 


சாய்ந்தமருதில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை முன்னெடுக்க நலன்புரி அமைப்பு உதயம்


(அஸ்லம் எஸ்.மௌலானா)


சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை தன்னார்வத்துடன் முன்னெடுப்பதற்காக நலன்புரி அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.


சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை எனும் பெயரிலான இந்த அமைப்பின் அங்குராப்பண நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் நிலைய மண்டபத்தில் நேற்று ஞாயிறு (09) மாலை நடைபெற்றது.


சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எம்.சலீம் அவர்கள் முன்னிலையில் சிவில் சமூக செயற்பாட்டாளர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்க விடயத்தில் மக்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் மற்றும் கால தாமதங்களை நிவர்த்தி செய்வதற்காகவும் தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் ஒழுங்கமைக்கப்பட்ட தன்னார்வ அமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது.


ஒரு வீட்டில் திடீரென மரணம் சம்பவிக்கும்போது அதனை மக்கள் பார்வைக்காக வைப்பது முதல் கப்று தோண்டுதல், கபனிடுதல், குளிப்பாட்டல், கொண்டுசெல்லல், அடக்கம் செய்தல் என்று ஒவ்வொரு விடயத்திலும் அக்குடும்பத்தினர் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவது குறித்தும் வைத்தியசாலையில் மரணிப்போரின் ஜனாஸாக்களை விடுவிப்பதில் எதிர்கொள்ளப்படுகின்ற கால தாமதம், கெடுபிடி, இடர்பாடுகள் தொடர்பிலும் எடுத்துக் கூறப்பட்டது.


மையவாடி பராமரிப்பு, கப்று ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் கவனிப்பாரின்றி சீரற்று காணப்படுவது குறித்தும் நல்லடக்கம் செய்யும்போது மையவாடியில் இடம்பெறுகின்ற விரும்பத்தகாத செயற்பாடுகள், பெரும்பாலானோர் பயான், துஆ விடயங்களில் கவனம் செலுத்தாமல் அங்கும் இங்கும் கூடி நின்று கதைத்தல், சலசலப்பு காரணமாக ஏற்படுகின்ற இடைஞ்சல்கள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.


சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸா விடயங்களை கையாள்வதற்காக பொது அமைப்பொன்று இல்லாதிருப்பதே மேற்படி குறைகளும் குளறுபடிகளும் ஏற்படக் காரணம் என்பதுடன் சீரான ஏற்பாடுகளுக்கு முன்னிற்பதற்கும் பொறுப்புக்கூறலுக்கும் அமைப்பொன்று அவசியம் என்பதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


இவற்றை மையப்படுத்தியே இப்பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை இதய சுத்தியுடன், தன்னார்வத்துடன் முன்னெடுப்பதற்காக அமைப்பொன்றை உருவாக்குவதற்கும் அதனை உத்வேகத்துடன் முன்கொண்டு செல்வதற்கும் இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான நலன்புரி அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக சிந்தித்து, பல்வேறு முயற்சிகளை திடமாக முன்னெடுத்து வந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களான எம்.எம்.உதுமாலெப்பை, அஸ்வர் அப்துஸ் ஸலாம், யூ.கே.காலிதீன் உள்ளிட்டோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களது இதயசுத்தியுடன் கூடிய முயற்சிகளை இறைவன் அங்கீகரித்து, சாத்தியப்படுத்தியுள்ளான் என்பது மனம் கொள்ளத்தக்கதாகும்.


இந்த நலன்புரி அமைப்பின் ஆரம்ப செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உலமா சபைத் தலைவர் எம்.எம்.சலீம் மௌலவி தலைமையில் 23 பேர் கொண்ட தற்காலிக முகாமைத்துவ சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் எம்.எம்.அஷ்ரப் மௌலவி, சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எம்.முபாறக், சிவில் சமூக செயற்பாட்டாளர்களான எம்.எம்.சாதாத், மருதூர் அன்சார், எம்.எம்.முர்ஷித், எம்.எம்.அமீர், ஏ.ஜி.எம்.நிம்சாத் மற்றும் இளைஞர்கள் சார்பிலான பலரது கருத்துகளும் அமைப்பின் உருவாக்கத்திற்கும் எதிர்கால செயற்பாடுகளுக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.