அக்கரப்பத்தனையில் மூன்று கோவில்களில் கொள்ளையர்கள் கைவரிசை





 (க.கிஷாந்தன்)

 

நுவரெலியா - அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் சாமி கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

இதற்கிடையே இதற்கு அடுத்துள்ள பச்சைபங்களா தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து, அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து எடுத்துச் சென்று விட்டனா். இதற்கு அடுத்து உருலேக்கர் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்று விட்டனா்.

 

அக்கரப்பத்தனை நகரத்திற்கு அடுத்தடுத்த தோட்டங்களில் ஓரே நாளில் மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த கோவில் கொள்ளைகள் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

 

இதனையடுத்து அக்கரப்பத்தனை பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை பிரிவினரும் ஆலய கட்டிடங்களுக்கு சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

 

அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.