(க.கிஷாந்தன்)
மவுஸாகலை நீர்தேக்கத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி முதல் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
மவுஸாகலை நீர்தேக்கத்தின் நீர் பாசன பொறியியலாளர்களால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
மத்திய மலை நாட்டில் உள்ள பெரும் பாலான குளங்கள் சுத்தப்படுத்தப்படாமையாலும், போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்காமையாலும் நீர் மின் உற்பத்தி வெகுவாக குறைவடைந்து வருகின்றது.
குறிப்பாக 25 வீதத்தால் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வாக தற்போது இடைக்கிடையே மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
நிலைமையை கருத்தில் கொண்டு மவுஸாகலை நீர் தேக்கத்தில் இருந்து கெனியோன் வரை நீரை கொண்டுச் செல்லும் சுரங்க பாதையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சுரங்க பாதையில் இடைக்கிடையே கழிவுகள் தேங்கியுள்ளதால் அவற்றை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளில் மவுஸாகலை நீர்தேக்க நீர் பாசன பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி இரண்டாம் திகதி முதல் 78 நாட்கள் நீரை கொண்டுச் செல்லும் சுரங்க பாதையை துப்புரவு செய்து அதிலுள்ள கழிவுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக மவுஸாகலை நீர்தேக்கத்க நீர் பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓவ்வொரு நீர்பாசன சுரங்க பாதையும் 10 வருடத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கெனியோன, பொல்பிட்டிய சமனல நீர் தேக்கங்களில் வேறு சுரங்க பாதையை பாவித்து மின் உற்பத்தி நடைபெறுவதாகவும் நீர் பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கெனியோன் மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த இரண்டாம் திகதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மின் உற்பத்திக்கு 60 மெகா வோட் மின்சாரம் இல்லாது போயுள்ளது.
அத்துடன் கடந்த மாதங்களில் கெனியோன் மின் உற்பத்தி நிலையத்தின் சுரங்க பாதையில் கோளாறு ஏற்பட்டமையால் அங்குள்ள இரண்டு டேபன்டயினர்கள் சேதமடைந்தாக நீர் பாசன பொறியியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதில் ஒரு டேபன்டயினர் செயற்பட்டால் தேசிய மின் உற்பத்திக்கு 30 மெகா வோட் மின்சாரம் கிடைக்கும் சாத்தியமுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்காகவே தற்போது சுரங்க பாதையை கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெறுவதாகவும் மாறாக இது சீர் குழைக்கும் வேலை அல்ல எனவும் நீர் பாசன பொறியியலாளர்கள் இதன்போது மேலும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment