களுவாஞ்சிகுடி வீட்டுத்திட்டத்தில், சிறுமியின் உயிரைக் காவு கொண்ட பீப்பாய்.





 மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி மாரியம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள வீட்டுத் திட்டத்தில் சிறியரக பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்றினுள் 3 வயது சிறுமி தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை உறவினர் வீடொன்றிற்கு வெளியில் சென்றிருந்த நிலையில் தங்கை வீழ்ந்துள்ளதை அவதானித்த சிறுமியின் 5 வயதுடைய சகோதரன் வீட்டிற்குள் சமைத்துக் கொண்டிருந்த தாயிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இதனையடுத்து உடன் விரைந்து மகளை மீட்ட தாய் அயலவர்களின் உதவியுடன், உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..

இந்நிலையில், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.