கெரண்டி எல்ல ஆற்றில் குளிக்க சென்ற, நால்வர் பலி




 


(க.கிஷாந்தன்)

பதுளை  அட்டாம்பிட்டிய உமாஒயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா கெரண்டி எல்ல ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரில்நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்கள் நேற்று (29) மாலை கண்டெடுக்கப்பட்டதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சிறுமியின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அடம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாம்பிட்டிய தோட்ட பகுதியை சேர்ந்த ராஜா டேவிட் குமார் (23), சிவ சுப்ரமணியம் காஞ்சனா (21), பவாணி (22), சிந்து (18) மற்றும் சிரியா (20) ஆகியோரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அட்டாம்பிட்டிய தோட்டத்தின் முதலாம் பிரிவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பதினொரு பேர் கொண்ட குழுவொன்று நேற்று கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்குச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆற்றில் மிகவும் ஆழமாக உள்ளதால் யாரும் அதில் குளிப்பதில்லை என அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அட்டாம்பிட்டிய பொலிஸாரும், பதுளை எலதலுவ இராணுவத்தினரும் இணைந்து குறித்த நான்கு பேரின் சடலங்களையும்  மீட்டுள்ளதோடுகாணாமல் போன சிறுமியின் சடலத்தை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நால்வரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அட்டாம்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.