சென்னையை அலறவிட்ட ஜேசன் ஹோல்டர், ஹெலிகாப்டர் ஷாட்டில் கரை சேர்த்த தோனி





ஐபிஎல் 2021 சீசனின் 44ஆவது போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி வியாழக்கிழமை ஷார்ஜா மைதானத்தில் நடந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

சென்னை போன்ற வலுவான அணிக்கு எளிய இலக்கு இருந்த போதிலும் திடீரென விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. சென்னை அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி, தன் அக்மார்க் சிக்ஸர் அடித்து சூப்பர் கிங்ஸை கரை சேர்த்தார்.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. ஜேசன் ராய் 2 ரன்களோடு வெளியேறினார். மறு புறம் விரித்திமான் சாஹா நிதானம் காட்டி ரன்களைக் குவித்தாலும், மறு பக்கம் கேன் வில்லியம்சன் 11 ரன்களோடும், ப்ரியம் கார்க் 7 ரன்களோடும் பெவிலியன் திரும்பினர். விரித்திமான் சாஹாவுக்கு ஈடு கொடுத்து நின்று விளையாட ஆள் இல்லாமல் தடுமாறினார்.

12.3ஆவது ஓவரில் விரித்திமான் சாஹாவும் வீழ்ந்தார். அப்போதே ஹைதராபாத் 4 விக்கெட் இழந்து 74 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

அவருக்குப் பின் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, அப்துல் சமத் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் முறையே 18, 18, 5 ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

    RR vs RCB: வெற்றி நடைபோடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - காரணம் என்ன?
    MI vs PBKS: பஞ்சாபை வென்று ப்ளே-ஆஃப் கனவை தக்க வைத்த மும்பை இந்தியன்ஸ்

சொல்லப் போனால் சன்ரைசர்ஸ் அணியிலேயே அபிஷேக் மற்றும் அப்துல் ஜோடி தான் அதிகபட்சமாக 35 ரன்களைக் குவித்தனர். கடைசி சில ஓவர்களில் களமிறங்கிய ரஷீத் கான் 17 ரன்களை அடித்தார்.

இதெல்லாம் போக சென்னை அணிகூடுதலாக 10 ரன்களைக் கொடுத்திருந்தது. 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது ஹைதராபாத்.

சென்னையின் ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவர்களுக்கு 24 ரன்களைக் கொடுத்து ஜேசன் ராய் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ட்வெயின் ப்ராவோ 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே கொடுத்து கேன் வில்லியம்சன் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹைதராபாத்தின் ரன் ரேட்டுக்கு பெருந்தடை ஏற்படுத்தினார்.

ஷர்துல் தாகூர் 4 ஓவர்களில் 37 ரன்களை கொடுத்து ஜேசன் ஹோல்டரின் விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 3 ஓவர்களில் 14 ரன்களை கொடுத்து விரித்திமான் சாஹா விக்கெட்டையும் வீழ்த்தினர்.
135 இலக்கு... இருப்பினும் தடுமாறிய சென்னை
ஜேசன் ஹோல்டர்   

ஜேசன் ஹோல்டர், கோப்புப் படம்

எளிய இலக்கோடு களமிறங்கிய ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டூப்ளசி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 10.1ஆவது பந்தில் ரிதுராஜ் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் நல்ல ரன்களோடு டூப்ளசி ஆடிக் கொண்டிருந்தார்.

ஆனால் அடுத்தடுத்த வந்த மொயின் அலி 17 ரன்களோடும், சுரேஷ் ரெய்னா 2 ரன்களோடும் சடசடவென சரிந்தனர். அவர்களைத் தொடர்ந்து டூப்ளசியும் வெளியேற்றப்பட்டார்.

10.1 ஓவரில் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்றிருந்த நிலை, 15.5 ஓவரில் திடீரென 108 ரன்களுக்கு 4 விக்கெட் என சென்னையை கதிகலங்கச் செய்தது.

இதற்கு ஒற்றை காரணம் ஜேசன் ஹோல்டர். ஆம், அந்த ஒற்றை மனிதர் தான் ரிதுராஜ், ரெய்னா, டூப்ளசி என சென்னையின் முக்கிய பேட்டர்களை வெளியேற்றி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றார்.

4 விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி மற்றும் அம்பதி ராயுடு இணை களத்தில் நிதானம் காட்டி அணியை வெற்றி பெறச் செய்தது.

குறிப்பாக தோனி அடித்த அந்த சிக்ஸரை இணையவாசிகள், தோனி ரசிகர்கள் மற்றும் சென்னை விசிறிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம், BCCI/IPL
படக்குறிப்பு,

மகேந்திர சிங் தோனி, கோப்புப் படம்

இப்போட்டியின் வெற்றி மூலம் சென்னை முதல் அணியாக தன் ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சென்னை அணி 2020ஆம் ஆண்டு தவிர மற்ற எல்லா சீசனிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் சீசனில் அதிகாரபூர்வமாக தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கியதிலிருந்து நடைபெற்ற நான்கு (அனைத்து) போட்டிகளிலும் சென்னை வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய கடும் போட்டி நிலவும் நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்தவிருக்கின்றன. நாளை டெல்லியும், மும்பையும் மோத உள்ளன.