மின்னணு கழிவுகள் உலக அளவில் ஒரு தலைவலியாகவே உருவெடுத்துள்ளன. 2021ம் ஆண்டில் மட்டும் தூக்கி எறியப்பட்ட பழைய மின்னணுப் பொருள்களின் எடை 5.7 கோடி டன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளார்கள்.
மின் மற்றும் மின்னணு சாதனக் கழிவுகளை கையாள்வது தொடர்பான சர்வதேச வல்லுநர் குழு ஒன்று இந்த மதிப்பீட்டை செய்துள்ளது.
5.7 கோடி டன் என்பது சீனப் பெருஞ்சுவரின் எடையைவிட அதிகம்.
இதுவரை புவியில் செயற்கையாகப் படைக்கப்பட்ட பொருள்களிலேயே அதிக எடை கொண்டது சீனப்பெருஞ்சுவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மொபைல் போன்கள், குளிர்சாதனப் பெட்டிகள், கெட்டில்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்னணு பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் போன்றவை இந்தக் கழிவுப் பொருள்களில் அடக்கம்.
தூக்கி வீசப்பட்ட அந்த மின்னணு கழிவுகளின் மதிப்பு பிரும்மாண்டமானது என்கிறது அந்த வல்லுநர் குழு.
உலக மின்னணு கழிவுப் பொருள்களின் மதிப்பு 62.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்கிறது வேர்ல்டு எக்கனாமிக் ஃபோரம் வெளியிட்ட ஓர் அறிக்கை. இது பெரும்பாலான நாடுகளின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பைவிட அதிகம்.
"ஒரு டன் வீசியெறியப்பட்ட மொபைல் போன்களில் 1 டன் தங்கத் தாதுவில் இருப்பதைவிட அதிகம் தங்கம் இருக்கும்," என்கிறார் ஐ.நா. நீடித்த நிலைத்த சுழற்சித் திட்டத்தின் இயக்குநர் ரியூடிஜெர் கியூயர்.
குவியும் சாதனங்கள்
இ-கழிவுகள் என்று கூறப்படும் இந்த மின்னணு கழிவு உற்பத்தி ஒவ்வோர் ஆண்டும் 2 மில்லியன் டன் அதிகரிக்கிறது. மொத்த உற்பத்தியில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே மறுசுழற்சிக்கு உள்ளாகிறது.
குறைவான ஆயுளும், சீர் செய்வதற்கான குறைவான வாய்ப்புகளும் உள்ள பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த இ-கழிவுகள் அதிகரிப்பதற்கு உற்பத்தியாளர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்று மின், மின்னணு கழிவுப் பொருள்களைக் கையாள்வதற்கான வல்லுநர் குழுவின் தலைமை இயக்குநர் பாஸ்கல் லெராய் குறிப்பிடுகிறார்.
"மொபைல் போன்களில் அதிவேகமாக செய்யப்படும் வளர்ச்சிகளால் பழை போன்களை மாற்றவேண்டிய நிலை சந்தையில் ஏற்பட்டுள்ளது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தங்கள் தனிப்பட்ட மின்னணு சாதனங்களை மறுசுழற்சி செய்வதற்கு நுகர்வோரிடமும் தயக்கம் இருக்கக்கூடும். பிரிட்டனில் 4 கோடி பயன்படுத்தப்படாத சாதனங்கள் வீட்டில் உறங்குவதாக ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி 2019ல் செய்த ஓர் ஆய்வில் தெரியவந்தது. திறன் பேசிகளை செய்வதற்குத் தேவையான சில அரிதான, மதிப்பு மிக்க தனிமங்களின் சப்ளையில் இது பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு நூற்றாண்டில் தீரப்போகும் இத் தனிமங்கள் செல்போன் செய்யத் தேவை
- கேலியம் (Gallium): மருத்துவ வெப்பமானிகள், எல்.இ.டி.கள், சோலார் பேனல்கள், டெலஸ்கோப்புகள் ஆகியவற்றில் பயன்படும். புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
- ஆர்சனிக் (Arsenic): பட்டாசுகளில் பயன்படும்.
- வெள்ளி (Silver): கண்ணாடிகளில், எதிர்வினையாற்றும் லென்ஸ்களில், பாக்டீரியா எதிர்ப்பு துணி மற்றும் கையுறைகளில் பயன்படுகின்றன.
- இன்டியம் (Indium): டிரான்சிஸ்டர், மைக்ரோ சிப், தீயணைப்பதற்கான நீர் தூவும் இயந்திரம், ஃபார்முலா 1 கார்களுக்கான பால் பேரிங்குகள், சோலார் பேனல்களுக்கான மேல்பூச்சு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
- யிட்ரியம் (Yttrium): வெள்ளை எல்.இ.டி. விளக்குகள், கேமரா லென்ஸ்கள், சில வகை புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படும்.
- டான்டலம் (Tantalum): அறுவை சிகிச்சைகளில் உள்ளே வைக்கப்படும் இம்ப்ளான்டுகள், நியான் விளக்குகளின் எலக்ட்ராடுகள், டர்பைன் பிளேடுகள், ராக்கெட் நாசில்கள், சூப்பர்சானிக் விமானங்களின் நோஸ் கேப்புகள், காது கேட்கும் கருவிகள், பேஸ் மேக்கர்கள் போன்றவற்றில் பயன்படுகிறது.
"சரியானதை செய்ய நுகர்வோர் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான தகவல்கள் தெரிவிக்கப்படவேண்டும். அத்துடன் இ-கழிவுகளை சரியான முறையில் அகற்றுவது சமூக நெறியாக மாறுவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் வேண்டும்," என்கிறார் பாஸ்கல் லெரோய். மின்னணு பொருள்களை தூக்கி வீசாமல் அவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு டன் மின், மின்னணு கழிவுகளை மறு சுழற்சி செய்வதன் மூலம் இரண்டு டன் கரியமில வாயு உமிழ்வைத் தடுக்க முடியும். எனவே பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டுக்கு நமது அரசுகள் செல்லும் நிலையில், கார்பன் உமிழ்வை குறைக்க இந்த நடவடிக்கை முன்னெப்போதையும்விட முக்கியம்" என்கிறார் அவர்.
பிரிட்டனில் உள்ள மெட்டீரியல் ஃபோகஸ் என்ற நிறுவனம் அஞ்சல் குறியீட்டை அடிப்படையாக வைத்து மக்களுக்கு அவர்களுக்கு அருகே உள்ள இ-கழிவு மறுசுழற்சி மையம் குறித்த தகவல்களை அளிக்கிறது.
Post a Comment
Post a Comment