அடுத்த புதிய தலைவலி ; "மு" என்ற புதிய கொரோனா வைரஸ்




 


ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ‘மு’ (Mu) எனப்படும் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது விஞ்ஞான ரீதியாக B.1.621 என அறியப்படுகிறது. உலகளவில் மீண்டும் கொரோனா தொற்று விகிதங்கள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி திட்டங்கள் விரிவுப்படுத்தப்பட்டு இருப்பினும், சில நாடுகளில் நாளாந்தம் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 195,402,644 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.85 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 218,567,870 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45 லட்சத்து 34 ஆயிரத்து 152 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 18,631,074 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 106,272 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.



- Kayal