30 வருடங்கள் பூர்த்தி,காத்தான்குடி பிரதான வீதி வேன் குண்டுவெடிப்பு





Firthous Mbm

01.09.1991ம் ஆண்டு காத்தான்குடி பிரதான வீதியில் ( மெத்தைப்பள்ளிவாயல் கடைத்தொகுதி முன்பாக ) தமிழீழ விடுதலைப் புலிகளினால் வேன் ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு நேரம் குறித்து வெடிக்கச் செய்யப்பட்ட பாரிய குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 30 ஙருடங்கள் பூர்த்தியாகின்றன.
1987 களின் பின்னர் விடுதலைப்புலிகள் காத்தான்குடி முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களில் இதுவும முக்கியமானதொரு தாக்குதல் சம்பவமாகும் .
இலங்கை இராணுவத்தினரை இலக்குவைத்து வாகனக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கான பரீட்சார்த்த முயற்ச்சியாகவே இக்குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும், தமது உள்ளூர்த் தயாரிப்புக்களின் தாக்குதிணை அளவீடு செய்வதற்கான பரீட்சார்த்த குண்டுப் பரிசீலனைக்கான இடமாகவே காத்தான்குடியினை விடுதலைப்புலிகள் தெரிவு செய்திருந்தார்கள் என இக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினர் கருத்துவெளியிட்டனர்.
தமது மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கான பரிசோதனைக் களமாக காத்தான்குடியையும், அப்பாவிப் பொதுமக்களையும் விடுதலைப்புலிகள் தெரிவுசெய்திருந்தமை என்றுமே நியாயப்படுத்தமுடியாத்தொரு செயற்பாடாகும்,
இக்குண்டுத்தாக்குதலில் சுமார் 25 பேரளவில் ஷஹீதாக்கப்பட்டதோடு 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இக்குண்டுத் தாக்குதலில் எனது அன்புக்குரி மாமா எம.ஏ. ஆப்தீன் அவர்களும் தனது 24 வயதில் ஷஹீதாக்கப்பட்டார்கள்.
இத்தாக்குதல் சம்பவத்தில் ஷஹீதாக்கப்பட்ட அனைத்து ஷுஹதாக்களதும் மறுமைவாழ்வுக்காகப் பிரார்த்திப்போமாக,
அவ்வாறே இவ்வாறான துன்பகரமான நிகழ்வுகள் இனிமேலும் இனத்தின் பெயராலோ, சமயங்களின் பெயராலோ இடம்பெறாமலிருக்கவும், சமாதானம், அமைதி வலுப்பெறவும் நாம அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோமாக.