இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.
தாமதமாக கிடைத்த தகவல்களின் பிரகாரம், கடந்த நான்கு நாட்களுக்கான நோயாளர்களின் விபரம் உள்ளடக்கப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் வரை 4,03,285 ஆக காணப்பட்டது.
3,48, 930 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளில் 46,605 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்தது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் 20 வீதமானவர்கள் வீடுகளில் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்தது
ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி வரை இலங்கையில் பதிவான கொரோனா மரணங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.
தொற்றுநோயியல் பிரிவு இறுதியாக விடுத்துள்ள ஆய்வு அறிக்கைக்கு அமைய, ஆகஸ்ட் 13 ஆம் திகதி வரை இலங்கையில் 5,775 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதில் 4,661 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அல்லது இடைநடுவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 362 ஆக பதிவாகியுள்ளது.
இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களில் 12.9 வீதமான 745 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்தது.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களில் 19.3 வீதமானவை வீடுகளில் அல்லது சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது
Post a Comment
Post a Comment