”எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்




 


காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி)  நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளின் சங்கத்தின் ஆலோசகரான தாமோதரம் பிரதீபன் தெரிவித்தார்.



சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றினை திங்கட்கிழமை (30) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை  பாண்டிருப்பில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் மேற்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு சார்பாக காணப்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் சார்பாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற கவனயீர்ப்பு பேரணி  மற்றும் காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நீதி நிலைநாட்டல் தொடர்பிலான நிகழ்வுகளை இந்த நாட்டிலும் உலகத்திலும் கொரோனா அசாதாரண சூழலில் கூட அவற்றை தவிர்த்திருந்தாலும் ஒவ்வொரு உறவுகளும் தங்களது வீடுகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி வேணும் என்ற பிராத்தனைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாக இருக்கின்ற எமது உறவுகளின் இணைப்பாளர்கள் ஊடக சந்திப்புகளையும் நியாயமான நீதி கோரிய அடித்தளங்களை இட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள்.அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளின் சங்கத்தின் ஆலோசகரான நானும் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி செல்வராணியும் ஒரு ஊடக சந்திப்புகளை திருக்கோவில் மற்றும் கல்முனையிலும்  ஒழுங்கு செய்துள்ளோம்.இந்த ஊடக சந்திப்பானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அல்லது தொலைந்து போன உறவுகளுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை அடங்கியதான இவ்வூடக சந்திப்புக்களை   இலங்கை அரசு மீள் பரிசீலனைகளை மேற்கொள்ள வேண்டும்.

சர்வதேசமும் இவ்விடயத்தில் மீண்டும் கவனத்தை செலுத்தி எங்களுக்கான நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு இன்று யாழ் மாவட்டம் வடக்கு பகுதியில் 2000 நாட்களை கடந்து உறவுகளின் நீதி கோரல் போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த அரசு மீண்டும் மீண்டும் கண் துடைப்பிற்காக  மீண்டும் மீண்டும் ஏற்பாடு செய்கின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி) போன்ற அலுவலகங்களை நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.


எமது நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்தும் கூட பாதிக்கப்பட்ட உறவுகள் முன்னாள் போராளிகள் இன்று ஒரு வேளை உணவினை பெற்றுக்கொள்ள முடியாத சூழலை எதிர்கொண்டுள்ளனர்.இதனை அரசும் சர்வதேசமும் புரிந்து  கொண்டு உதவிகளை வழங்க வேண்டும்.இந்த அரசாங்கம் குறித்த உறவுகளுக்காக செயற்படுகின்ற செயற்பாட்டாளர்கள் மற்றும் இணைப்பாளர்களை அச்சுறுத்துவதை விடுத்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.