(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி வழங்கும் செயத்திட்டத்திற்கமைய கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரதேசத்திற்குட்பட்ட பத்தனை கிராம சேவகர் பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு 30.08.2021 பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் கொட்டும் மழையினையும் பாராது சுகாதார பிரிவினர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன் மக்கள் மழையினையும் பொருட்படுத்தாது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தனர்.
மேலும், அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகார பிரதேசத்திற்குட்பட்ட வட்டவளை மற்றும் குயில்வத்தை கிராம சேவகர்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட குயில் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதே வேளை அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை 65 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 45 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் நெருக்கமான உறவை பேணியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வட்டவளை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் கே.காமதேவன் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment