தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகிறார் பேராசிரியர் எம்.எம். பாஸில்




 


(சர்ஜுன் லாபீர்,எம்.பெளஸர்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியினைத் தெரிவு செய்யும் நிகழ்வு இன்று (16.08.2021) காலை 10 மணிக்கு கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ஏ. றமீஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தினுடைய உயர் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சபையினரின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்கள் போட்டியின்றி கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். கலை கலாசார பீடத்தின் பழைய மாணவரான பேராசிரியர் எம்.எம். பாஸில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அப்பீடத்தின் பீடாதிபதியாகச் செயற்படவுள்ளார்.

மர்ஹூம் வெள்ளைக்குட்டி மன்சூர், முஹம்மது இப்றாஹிம் உம்மு சல்மா தம்பதியினரின் மூத்த புதல்வரான பேராசிரியர் எம்.எம். பாஸில், 1974ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியினை மருதமுனை அல்மனார் மத்திய கல்லுாரியில் பெற்றுக்கொண்டார். உயர் தரத்தில் கலைப் பிரிவினைத் தெரிவு செய்திருந்த இவர், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதற்தொகுதி மாணவர்களுள் ஒருவராக இருந்தார். பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தினை விசேட துறையாகத் தெரிவு செய்து, அதில் சிறப்புச் சித்திபெற்றார். பேராசிரியர் எம்.எம். பாஸில் பல்கலைக்கழகக் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் மட்டும் நின்றுவிடமால் ஏனைய சமூகம்சார் செயற்பாடுகளிலும் அக்கறையுடன் செயற்பட்டிருந்தார். மாணவப் பருவத்திலிருந்தே மற்றவர்களுக்கு உதவும் குணவியல்பினை வளர்த்துக் கொண்ட பேராசிரியர் எம்.எம். பாஸில், தன்னுடன் கற்ற – தான் கற்பித்த பல மாணவர்கள் கல்வியில் உயர்ந்து நிற்பதற்கு அளப்பரிய பங்களிப்பினைச் செய்தார். 

2000ஆம் ஆண்டு அரசியல் விஞ்ஞானத் துறையில் சிறப்புப் பட்டத்தினை நிறைவுசெய்த பேராசிரியர் எம்.எம். பாஸில், பின்னர் அத்துறையின் விரிவுரையாளர் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்கள், நிருவாகிகள், விரிவுரையாளர்கள், போதனைசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பல்கலைக்கழக சமூகத்துடன் நல்லுறவினைப் பேணிவந்த இவர், ஆரம்பம் முதல் பல்கலைக்கழகத்தினதும் கலை கலாசார பீடத்தினதும் அரசியல் விஞ்ஞானத் துறையினதும் வளர்ச்சிக்கு குறிப்பிடும்படியான பங்களிப்பினை வழங்கியுள்ளார். தான் ஒரு நிரந்தர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா புலமைப் பரிசில் பெற்று, அந்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகிய மேஜி பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் முதுமாணிப் பட்டத்தினை நிறைவுசெய்தார். பின்னர் உலக வங்கியின் நிதிப் புலமைப்பரிசில் பெற்று உலகத் தரம் வாய்ந்த மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிக் கற்கையினையும் நிறைவு செய்துள்ளார்.

பேராசிரியர் எம்.எம். பாஸில் இலங்கை முஸ்லிம் அரசியல், இனத்துவப் பிணக்குகள், சமூக நல்லிணக்கம், மனித உரிமைகள், சர்வதேச உறவுகள் போன்ற துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். அத்துறைகள் தொடர்பான பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவரது கட்டுரைகள் பல உலகத் தரம்வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. சமூக – அரசியல் இயங்குநிலை குறித்த அவரது ஆய்வு முடிவுகள் தேசிய – சர்வதேச ஆய்வு மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றவை. பல்கலைக்கழகக் கல்வித் துறையில் அவர் அடைந்துள்ள உயர்ச்சியினால் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பேராசிரியராக செயற்படும் வகையில் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அரசியல் விஞ்ஞானத் துறையில் பேராசிரியர் பதவி உயர்வு பெற்ற முதல் நபர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.      

முன்னர் குறிப்பிட்டதுபோல் பேராசிரியர் எம்.எம். பாஸில் பல்கலைக்கழக கற்றல் – கற்பித்தல் – நிருவாகச் செயற்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்; தனக்கு ஒப்படைக்கப்படும் பணியினை செவ்வனே நிறைவேற்றுவதில் உறுதியாக நிற்பவர்; தனது சக விரிவுரையாளர்களும் மாணவர்களும் உயர்ந்து நிற்பதில் மன மகிழ்ச்சி கொள்பவர்; தனது பல்கலைக்கழகமும் பீடமும் துறையும் புதுமைகளைப் படைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்; கலை கலாசார பீடத்தின் முன்னாள் பீடாதிபதிகளுக்கு தோல்கொடுத்து பீடத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றியார். அத்தகைய ஒருவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருப்பது அப்பீடத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.