மிதக்கும் விருந்தகம் நுவரெலியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.





 (க.கிஷாந்தன்)

 

நுவரெலியா கிரகெறி வாவியில் அமைந்துள்ள மிதக்கும் விருந்தகம் நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் குறித்த மிதக்கும் விருந்தகத்தில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் அங்கு கடமையாற்றிய இரண்டு நபர்களையும் நடமாடும் விருந்தகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

நுவரெலியா ஆடைத் தொழிற்சாலை ஒன்றிற்கு கடமை நிமித்தமாக வருகை தந்திருந்த நான்கு பேர் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்துமாறு நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினரால் அவர்கள் வசிக்கின்ற கிராம சேவகர் பிரிவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

இவர்கள் நான்கு பேரும் வெளிமாவட்டங்களில் இருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ளனர். கெகிராவ பகுதியில் இருந்து 3 பேரும் ஹபரண கொகரல்ல பகுதியில் இருந்து ஒருவருமாக நான்கு பேர் வருகை தந்துள்ளனர்.

 

இவர்கள் கடமை நிமித்தமாக நுவரெலியா ஆடைத் தொழிற்சாலைக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே தற்பொழுது அமுலில் உள்ள பயண கட்டுப்பாடுகளையும் கொரோனா விதிகளையும் மீறி கிரகறி வாவியில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் விருந்தகத்தில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நடமாடும் விருந்துபசாரத்தில் கடமையில் இருந்த இருவரும் அங்கேயே 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

ஏனைய நால்வரையும் அவர்களுடைய வீடுகளுக்கு செல்வதற்கு சுகாதார பிரிவினர் அனுமதி வழங்கியதுடன் அவர்களை அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

 

அதே நேரம் இந்த நடவடிக்கையில் நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினரும் நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டுள்ளதுடன் அனைவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.