ஆப்கானிஸ்தான் அதிபர் நாட்டை விட்டுச் சென்றதாக தகவல் - புதிய திருப்பம்





ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டுச் சென்று விட்டதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை அரசு ஒப்படைப்பது தொடர்பாக அரசுடன் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

காபூல் விமான நிலையத்துக்கு தூதரகத்தை மாற்றும் அமெரிக்கா
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இயங்கி வந்த தமது தூதரகம், தற்காலிகமாக அந்த நகர விமான நிலைய வளாகத்துக்கு மாற்றப்படுவதாக அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

ஏபிசி நியூஸிடம் இது தொடர்பாக பேசிய அவர், "இதுபோன்ற சூழ்நிலைகளுக்காகவே எங்களுடைய சில படையினர் அங்கு உள்ளனர். அந்த நாட்டில் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நாங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவே இதை செய்கிறோம். காபூலில் உள்ள தூதரகத்தில் இருப்பவர்கள் விமான நிலைய வளாகத்துக்கு வரழைக்கப்பட்டுள்ளனர்," என்று கூறினார்.

தூதரக ஊழியர்களின் பட்டியல் முழுமையாக உள்ளதால் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான இரட்டிப்பு முயற்சிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலைமையை, வியட்நாமின் சைகானுடன் ஒப்பிடுவது தவறு என்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்து விட்டது என்றும் அன்டனி பிளிங்கென் கூறினார்.


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் அங்குள்ள விமான நிலையத்துக்கு ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சயீதி* என்ற மாணவர் நடந்தே வந்ததாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"எனது கால்கள் காப்பு காய்ச்சியது போல் ஆகிவிட்டன. நிற்கவே சிரமப்படுகிறேன்," என்று அவர் கூறினார்.

"காபூலின் தற்போது ராணுவ நகரம் போல காட்சியளிக்கிறது. அங்கிருப்பவர்கள் பாரம்பரிய உடையில் ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறார்கள். வானை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்கள். அதை பார்க்கும்போது எனது பெற்றோர் கூறிய ஜிஹாதி கதைகள்தான் நினைவுக்கு வருகின்றன," என்று சயீதி தெரிவித்தார்.

இஸ்தான்புல்லில் முதுகலை பட்டப்படிப்பு கல்வியை தொடருவதற்காக விமான நிலையம் வந்துள்ளார் சயீதி. கல்லூரி விடுமுறையை கழிக்க காபூலுக்கு வந்த அவர், மீண்டும் தமது இஸ்தான்புல் திரும்புகிறார்.

"இப்போது நான் திரும்புகிறேன். ஆனால், எனது பெற்றோரின் நிலை தெரியவில்லை. அவர்கள் தப்பிக்க வழியே இல்லை. இங்கு எதிர்காலம் இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை," என்று அவர் கூறினார்.

*பெயர் மாற்றப்பட்டுள்ளது.