இந்தியாவின் இன்னிங்ஸ் தோல்வியும், சில கேள்விகளும்!




 


பல கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு விடை தெரியும்பட்சத்திலேயே இந்தியா இந்தத் தொடரை வெல்ல முடியும். இல்லையேல் லார்ட்ஸ் போட்டியை மட்டும் வென்றுவிட்டு தொடரை இழந்த 2014 வரலாறு மீண்டும் நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


ஈடன்கார்டனில் டிராவிட்டும் லட்சுமணும் ஆடியதை போன்ற ஒரு இன்னிங்ஸை கோலியும் புஜாராவும் ஆடப்போகிறார்கள். கடைசியாக லீட்ஸில் இந்தியா ஆடிய போட்டியில் 600+ ஸ்கோரை அடித்திருக்கிறது. அதே லீட்ஸில் நடைபெறும் இந்தப் போட்டியில் அதேமாதிரி ஒரு பெரிய ஸ்கோரை அடித்து இங்கிலாந்தை சுருட்டிவிடுவார்கள் என நாஸ்டால்ஜியா கனவுகளோடு சுற்றித்திரிந்த இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது லீட்ஸ் டெஸ்ட்டின் முடிவு.

லார்ட்ஸில் ஒரு போட்டியை தோற்றால் இங்கிலாந்து எப்படிப்பட்ட வெறித்தனமான ரிவெஞ்ச்சை எடுக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தப் போட்டி. ஆம், இந்தியா மோசமான இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.



ராபின்சன்

ICC

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 354 ரன்கள் லீட் எடுத்தபோதே இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆனால், நேற்று இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம் ஒரு சிறு நம்பிக்கையை துளிர்க்கச் செய்தது.

ரோஹித் பொறுப்பாக ஒரு அரைசதம் அடித்திருந்தார். புஜாரா சர்ப்ரைஸாக ஒரு வேகமான இன்னிங்ஸை ஆடி சதத்தை நெருங்கியிருந்தார். ஆண்டர்சனுக்கு கவுண்டர் அட்டாக் கொடுத்து கோலி நன்கு செட்டில் ஆகியிருந்தார். ரஹானே, பண்ட், ஜடேஜா என அடுத்தடுத்து ஒரு படையே பேடைக் கட்டிக்கொண்டு பெவிலியனில் காத்திருந்தது. இந்தியாவின் சிறப்பான பேட்டிங்கை பார்க்கும்போது எப்படியும் இங்கிலாந்துக்கு ஒரு டார்கெட்டை செட் செய்துவிடுவார்கள். அதன்பிறகு, தோற்றாலும் பரவாயில்லை. முதல் இன்னிங்ஸில் 78 இல் ஆல் அவுட் ஆன அணி இவ்வளவு தூரம் வந்ததே பெரிது என மனதை தேற்றிக் கொள்ளலாம் என்றுதான் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், நடந்திருப்பது வேறு. 63 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து இந்தியா மோசமாக இன்னிங்க்ஸ் தோல்வியை அடைந்திருக்கிறது.

நேற்றே நியூபாலை எடுத்துவிட வேண்டும் என ஜோ ரூட்டும் மொயின் அலியும் தொடர்ந்து சரசரவென ஓவர்களை வீசிக்கொண்டிருந்தனர். ஆனால், இன்றைக்குத்தான் நியூபாலை எடுக்க முடிந்தது. நியூபால் எடுக்கப்பட்டு இருபதே ஓவர்களில் 63 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே இந்திய அணி மொத்தமாக ஆல் அவுட் ஆகியிருக்கிறது. நேற்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த புஜாராவைத் தொடக்கத்திலேயே ராபின்சன் lbw ஆக்கி வெளியேற்றினார். அங்கிருந்தே வீழ்ச்சி தொடங்கிவிட்டது.

கொஞ்ச நேரத்திலேயே கோலி ஆண்டர்சனிடம் முதல் இன்னிங்ஸை போன்றே எட்ஜ் ஆகி அவுட் ஆனார். அதிர்ச்சி இன்னும் கூடியது. ஆனால், ரிவியூவில் கோலி தப்பினார். அரைசதத்தைக் கடந்தார். 71வது சென்ச்சூரி வந்துவிடும் என ரசிகர்கள் உள்ளூற உற்சாகம் கொள்ளத் தொடங்கினர். ஆனால், சென்ச்சூரியெல்லாம் வரவில்லை. ராபின்சன் வந்தார். அவர் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற ரூட்டிடம் கேட்ச் ஆகி கோலி வெளியேறினார். ஆனால், அப்போதும் நம்பிக்கைக் குறைந்துவிடவில்லை.


கோலி

2014 சீரிஸில் லார்ட்ஸில் அடித்ததை போல ஒரு சதத்தை இங்கே லீட்ஸில் அடித்து ரஹானே காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைக் குரல் மனதின் ஒரு மூலைக்குள் கேட்டது. ரஹானே சதமடித்து பேட்டைத் தூக்கும் காட்சியை கற்பனை செய்து பார்ப்பதற்குள்ளேயே ஆண்டர்சன் பந்துவீச்சில் எட்ஜ் ஆகி ரஹானேவும் வெளியேறினார். கடைசி நம்பிக்கையாக பண்ட் க்ரீஸுக்குள் வந்தார். சிக்சர்களைப் பறக்க விடப்போகிறார். இங்கிலாந்து பௌலர்களைச் சிதறடிக்க போகிறார் என நினைக்கையில் அவர் பேட்டில் பட்ட ஒரே பந்தும் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்.


இதன்பிறகு, சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. இந்தியா ஆல் அவுட்! இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. வெறித்தனமாக வீசிய ராபின்சன், 5 விக்கெட் ஹால் எடுத்திருந்தார்.

முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் பேட்டிங் பௌலிங் இரண்டுமே பயங்கர சொதப்பலாக அமைந்திருந்தது. அதுவே இந்தியாவின் இன்னிங்ஸ் தோல்விக்குக் காரணமாக இருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு வரலாற்று வெற்றியை பெற்ற அணியை போல இந்தியா முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்திருக்கவில்லை. நல்ல ஃபார்மிலிருந்த ராகுல் முதல் ஓவரிலேயே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டைவிட்டு அவுட் ஆகியிருந்தார். கோலி வழக்கம்போல ஆண்டர்சனுக்கு இரையாகியிருந்தார். புஜாராவும் ரஹானேவும் தங்கள் சொதப்பல்களைத் தொடர்ந்திருந்தனர்.



இங்கிலாந்து

ICC

கிட்டத்தட்ட அடிலெய்டில் 36 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன இன்னிங்ஸை அப்படியே கார்பன் காப்பி எடுத்தது போலத்தான் இந்தியாவின் பேட்டிங் இருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் டீசண்ட்டாக பேட்டிங் ஆடியிருந்தாலும், முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளை ஈடுகட்டும் அளவுக்கான பேட்டிங் வெளிப்படவில்லை.