தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும்




 




இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

கோவிட்-19 தடுப்புக்கான செயலணியின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்வோரிடம் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியமைக்கான அட்டை குறித்த சோதனை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை வைத்திருந்திருத்தல் கட்டாயமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனை உறுதிப்படுத்துவதற்கான சோதனைகள், பொது இடங்களில் நடத்தப்படும் எனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா?
சீறும் டெல்டா திரிபு: இந்தியாவில் கண்ட காட்சி இலங்கையில் அரங்கேறுகிறதா?
இதேவேளை, இலங்கையில் கோவிட் மூன்றாவது அலை தற்போது மிக வேகமாக பரவி வருகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோவிட் டெல்டா திரிபு வேகமாக பரவி வருகின்ற பின்னணியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கோவிட்-19 தடுப்புக்கான செயலணி இன்று (13) கூடியது.


இந்த கூட்டத்தின்போது, பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு இன்று நள்ளிரவு முதல் கடுமையாக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், ஆடைத் தொழில்துறை, விவசாயம், துறைமுகம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் கோவிட் வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக நாளொன்றில் பதிவான அதிகளவிலான உயிரிழப்பு நேற்று முன்தினம் (11) பதிவானதாக நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நேற்று முன்தினம் 156 கோவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்தன.

கொரோனா
பட மூலாதாரம்,PMD
இந்த நிலையில், கோவிட் முதலாவது அலையில் 13 பேர் உயிரிழந்திருந்ததுடன், இரண்டாவது அலையில் 596 பேர் உயிரிழந்திருந்தனர்.

மூன்றாவது அலையில் 5 ஆயிரம் பேர் பலி
எனினும், கோவிட் மூன்றாவது அலையில் 5,011 பேர் உயிரிழந்துள்ளதாக கோவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் பதிவான கோவிட் உயிரிழப்புக்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மற்றும் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதனால், 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதேவேளை, நாட்டை முழுமையாக மூடுவதற்கான எந்தவொரு தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இனிவரும் காலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக இதுவரை 345,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.