இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தலிபான்கள்




 

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலுக்குள் அவர்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்நாட்டின் 34 மாகாண தலைநகர்களில் காபூல் மற்றும் 5 தலைநகரங்கள் தவிர ஏனைய அனைத்து மாகாணத் தலைநகரங்களையும் தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். கடந்த 10 நாட்களில், அரச படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் அதிகாரிகளின் பிரதானி தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களை அமைதியாக இருக்குமாறு கோரியுள்ளார். தயவுசெய்து கவலையடைய வேண்டாம். காபூல் கட்டுப்பாட்டில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

காபூலிலிருந்து வெளியேற விரும்புவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதாகவும் தலிபான் தலைமை தெரிவித்துள்ளது. காபூல் நகர வாயில்களை கடந்து செல்ல வேண்டாம் என தமது போராளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலிபான் அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் இறுதிக்கட்டத்தை தலிபான்கள் எட்டியுள்ளதாக AFP நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.