ஹிசாலியின் சடலம் இரண்டாவது முறையாக மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது




 


(க.கிஷாந்தன்)


முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீனின் கொழும்பு வீட்டில் பணியாற்றிய டயகம சிறுமி ஜூட்குமார் ஹிசாலியின் சடலம் இரண்டாவது முறையாக மீண்டும் சவக்குழியில் (13) மாலை 6.57 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

 

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நுவரெலியா நீதிமன்ற நீதவான் திருமதி. லுசாக்காகுமாரி முன்னிலையில் மூன்று சிரேஸ்ட சட்டவைத்தியர்கள் ஊடாக சிறுமி ஹிசாலினியின் உடல் அடங்கிய சவப் பேழை கடந்த  ஜூலை மாதம் (30) ஆம் திகதி பகல் 12.20 மணிக்கு டயகம மேற்கு தோட்ட சவக்குழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது.

 

இரண்டாவது முறையாக சிறுமியின் சடலத்தை பரிசோதணைக்கு உட்படுத்த நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சடலம் தோண்டப்பட்டு பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவே சடலம் தோண்டப்பட்டது.

 

டயகம பிரதேசத்திலிருந்து தனது 15 வயது வயதில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதின் வீட்டுக்கு பணிப்பெண்ணாக தரகர் ஒருவர் ஊடாக ஜூட்குமார் ஹிசாலினி பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

 

சிறுமி வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் ஜூலை (03) ஆம் திகதி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜூலை (15) ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

 

இதையடுத்து சிறுமியின் உயிரிழப்பு நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்ததுடன் சிறுவர் தொழிலாளி தீமூட்டி கொள்ளப்பட்டார் என மலையகம் உள்ளிட்ட நாட்டில் பல பிரதேசங்களிலும் பேசும் பொருளாக மாறியிருந்தது.

 

பொறுப்பு மிக்க அரசியல் தலைவர் ஒருவரின் வீட்டில் இவ்வாறு சிறுவர் தொழிலாளி தீயிக்கு இலக்காகி உயிரிழந்து விட்டார் எனவும் சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் மலையகம் உள்ளிட்ட நாட்டில் பல பிரதேசங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றது.

 

இந்த சம்பவம் குறித்து அரசியல் மட்டத்தில் அரசாங்கத்திற்கும் அழுத்தங்கள் வழங்கப்பட்டது.

பின் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதென நீதியான விசாரணை வேண்டும் என பொலிஸ் தலைமைக்கும் அழுத்தம் வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் சிறுமி எவ்வாறு உயிரிழந்தார், இதற்கு பொறுப்பு யார், சிறுமிக்கான துன்புறுத்தல் ,பாலியல் வண்புனர்வு என மூன்று கோணங்களில் விசாரணைகள் தனி பொலிஸ் குழுவொன்று அமைத்து விசாரிக்கப்பட்டது.

 

இதன்போது சந்தேக நபர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதின் மனைவி, மாமனார், மைத்துனர், மற்றும் தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரித்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

சிறுமியின் பெற்றோர் தனது மகளின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதென சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு அதிகார சபைக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறையிட்டிருந்தனர்.

 

இதற்கமைய கொழும்பு மேலதிக நீதவான் ரவீந்திர ஜயசூரிய முன்னிலையில் சிறுமி ஹிசாலினியின் மரண சம்பவம் குறித்த விசாரணை இடம்பெற்றது.

 

சிறுமியின் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்கள சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி அடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தை தோண்டி மீண்டும் இரண்டாவது பிரேத பரிசோதணைக்கு உட்படுத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவை கேட்டிருந்தார்.

 

இதற்கமைய சிறுமியின் சடலத்தை தோண்டி மீண்டும் பரிசோதணைக்கு உட்படுத்த வேண்டும் கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

இதன் பிரகாரம் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட டயகம மேற்கு தோட்ட புதைக்குழிக்கு பலத்த பொலிஸ் காவல் இடப்பட்டதுடன் விசேட பொலிஸ் குழுவும் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

 

நுவரெலியா, டயகம, மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸாரும் காவலில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

 

இந்த நிலையில் சிறுமியின் சடலத்தை தோண்டுவதற்கான கொழும்பு நீதிமன்ற உத்தரவை சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நுவரெலியா மாவட்ட நீதவான் திருமதி லுசாக்கா குமாரி ஜயசேகரவிடம் ஜுலை (29) ஆம் திகதி காலை ஆஜர் படுத்தினர்.

 

இதை பரிசித்த நீதவான் ஜூலை (30) ஆம் திகதி காலை 8.30 மணியளவில் தனது முன்னிலையில்  கொழும்பு,மற்றும் கண்டியிலிருந்து நுவரெலியாவுக்கு வரவழைக்கப்பட்ட சிரேஸ்ட சட்ட வைத்தியர்கள் மூவர்,அடங்கிய அதிகாரிகள் முன்னிலையில் புதைக்குழியை தோண்டி சடலத்தை பாதுகாப்பாக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப அனுமதியளித்தார்.

 

இதன் பிரகாரம் ஜூலை(30) காலை டயகம மேற்கு தோட்ட புதைக்குழிக்கு சென்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர் அங்கு புதைக்கப்பட்டிருந்த சிறுமி ஹிசாலினியின் புதை குழியை காலை 8.50 மணியளவில் தோண்ட ஆரம்பித்தனர்.

 

குழியை தோண்டும் நடவடிக்கை தொடர்ந்த நிலையில் பகல் 12.20 மணிக்கு சிறமி உடல் அடங்கிய பேழை எவ்வாறு இரண்டு கயிறுகள் இட்டு குழிக்குள் இறக்கப்பட்டதோ அதேபோல் கயிறிடப்பட்டு பேழையில் ஒட்டிய மண் தட்டப்பட்டு மேலே எடுத்து மேசை ஒன்றில் வைக்கப்பட்டது.

 

பின் பேழையை திறக்க உறவினர்களிடம் உத்தரவு கேட்கப்பட்டு பேழை திறக்கப்பட்டது.

 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர்,சகோதரன் மற்றும் உறவினர் சடலத்தை அடையாளம் காட்டிய பின் பேழை அடைக்கப்பட்டு பொலித்தீன் உரையிலிட்டு பொலிஸ் பாதுகாப்புடன் மலர்சாலை வேனில் பேராதனைக்கு வழியனுப்பி வைக்கப்பட்பட்டது.

 

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடலம் ஒன்பது மணிநேரம் இரண்டாம் பிரேத பரிசோதனை முதல் நாளில் முன்னெடுக்கப்பட்டு அதன் பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இந்த பிரேத பரிசோதனைகள் முடிவுற்ற நிலையில் சிறுமியின் உடல் மீண்டும் 15 நாட்களுக்கு பின் ஆகஸ்ட் (13)ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணிக்கு மலர்சாலை வாகனத்தில் டயகம மேற்கு தோட்ட மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்மக்கள்,உறவினர்கள் மத்தியில் கண்டி மற்றும் டயகம பிரதேச கிறிஸ்துவ சமய குருமாரின் ஜெய வழிபாடுகளுடன் மீண்டும் அதே புதைக்குழியில் அடக்கம் செய்யப்பட்டது.