காபூல் விமான நிலையத்தில் நேற்று (26) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு IS பயங்கரவாத அமைப்பின் பிராந்திய கிளை அமைப்பான ISIS-Kயினால் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல் அல்லது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படலாமென அமெரிக்க இராணுவ மத்திய கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் Frank McKenzie தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்க கட்டளைத் தளபதிகள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தம்மால் முடியுமான தயார்ப்படுத்தல்கள் அனைத்தையும் மேற்கொள்வதாக ஜெனரல் Frank McKenzie தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையிலும் தமது வௌியேற்றலை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் அமெரிக்க படைகள் ஈடுபட்டுள்ளன.
தாக்குதல்களின் பின்னர் ஆப்கான் பிரஜைகளை காபூலிலிருந்து வௌியேற்றும் நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
காபூல் விமான நிலையத்திருந்து வழமைபோன்று விமானங்கள் புறப்பட்டுச்செல்வதாக அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன.
Post a Comment
Post a Comment