திருக்கோவில் பிரதேசத்தில் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடிய 26 பேருக்கு கொரோனா




 



வி.சுகிர்தகுமார் 0777113659  

  தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடிய 26 பேர் கொரோனா தொற்றுடையவர்களாக திருக்கோவில் பிரதேசத்தில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
152 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் போதே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் தலைமையில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாகவே இவர்கள் தொற்றாளர்களாக கண்டு பிடிக்கப்பட்டனர்.
அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை இடம்பெற்ற இடத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் மு.சதிசேகரன் உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தவதற்காக சுகாதாரத்துறை மற்றும் பிரதேச செயலகம் பாதுகாப்பு தரப்பினர் பல்வேறு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.