ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7,500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும்




 


நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7,500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநிலைமை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நீடித்தால் 10,000 பேரை பாதுகாக்க முடியும் எனவும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.

நேற்றுடன் (27) நிறைவடைந்த 7 நாட்களில், ஒரு இலட்சம் சனத்தொகையில் இலங்கையில் மரண வீதம் 5.52 வீதமாக காணப்படுவதாக குறித்த குழு குறிப்பிட்டுள்ளது.

டெல்டா தொற்று வேகமாக பரவியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 10 நாட்களில், நாடு மூடப்பட்டுள்ளதால் பொருளாதாரத்திற்கு 1.12 பில்லியன் அமெரிக்க டொலர் பாதிப்பு ஏற்படுகின்றது.

எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதியுடன் நிறைவடையும் வகையில் 04 வாரங்கள் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பட்சத்தில் 1.67 பில்லியன் அமெரிக்க டொலர் பாதிப்பு ஏற்படும் என சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் நாட்டின் பொருளாதாரத்திற்கு 2.22 பில்லியன் அமெரிக்க டொலர் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உலக நாடுகள் மற்றும் உள்நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்ப இந்த பொருளாதார நிலைமை தற்காலிகமானது எனவும் மீண்டும் நாடு திறக்கப்பட்டவுடன் நிலைமை வழமைக்கு திரும்பும் என்பதையே காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இலங்கையில் தற்போது சிவப்பு அபாய நிலைமை காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு மேலும் தெரிவித்துள்ளது.