பட்டதாரி பயிலுநர்களை நிரந்தரமாக்க கோரிக்கை




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



அரச நிறுவனங்களில் கடமை புரியும் பட்டதாரி பயிலுநர்களை, எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரமாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஆர். றினோஸ் தெரிவித்தார்.

ஒன்றினைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் மற்றும் பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் இணைந்து ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுக்கும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியத்தால் அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல். பண்டார நாயக்கவிடம் இது தொடர்பான மகஜர், திங்கட்கிழமை (12) கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சகல பயிலுநர்களையும் நிரந்தரமாக்கும் போது பயிற்சி பெறும் நிறுவனங்களில் நிரந்தரமாக்க வேண்டுமெனவும், நிரந்தரமாக்கும் போது பயிற்சி பெறும் நிறுவனங்களை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட பயிலுநர்கள் உட்பட சகல பயிலுநர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்குதல், சுகாதாரக் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பயிலுநர்களுக்குரிய விசேட கொடுப்பனவை வழங்குவதோடு, ஏனைய பயிலுநர்களுக்கும் மேலதிக கொடுப்பனவை வழங்குதல், மாதாந்த கொடுப்பனவை தாமதமின்று வழங்குதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

--