(க.கிஷாந்தன்)
தொழிற்சங்கப்போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை கைது செய்து, அவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமையானது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலுக்கு ஒப்பானதாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
அட்டனில் 13.07.2021 இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இலவசக் கல்வியை பாதுகாப்பதற்காக ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அதற்கான ஜனநாயக உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை காரணம்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு பிணை கிடைத்தது. எனினும், பொலிஸார் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். நாட்டில் பொலிஸ் அராஜகம் தொடர்கின்றது என்பதற்கு இச்சம்பவமும் சான்று.
தொழிற்சங்க தலைவர்களின், உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்குவதானது ஜனநாயகத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.
அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட்டுவிட்டது எனக்கூறப்பட்டாலும், அது பூச்சாண்டி காட்டுவதற்கான நடவடிக்கையாகவே உள்ளது. வேலை சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு எதிரான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
கொட்டியாகலை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அரச அதிபரிடம் வினவினால், நிதி வழங்கப்படவில்ல எனக் கூறுகின்றார். - என்றார்.
Post a Comment
Post a Comment