கொரோனா பாதித்த மனிதர்களிடம் இருந்து பூனைகள், நாய்கள் போன்ற வளர்ப்பு விலங்குகளுக்கு நோய்த் தொற்று பரவும் என ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
310 வளர்ப்பு விலங்குகள் மற்றும் 196 உரிமையாளர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவற்றில் ஆறு பூனைகள் மற்றும் ஏழு நாய்களுக்கு பிசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. பிற 54 வளர்ப்புப் விலங்குகளின் உடலில் தொற்று ஏற்பட்டு மறைந்ததற்கான ஆன்டிபாடிகள் இருந்திருக்கின்றன.
"கொரோனா இருந்தால் உங்களுடைய நாய்கள் அல்லது பூனைகளின் பக்கம் செல்லாதீர்கள். மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்வீர்களோ அப்படியே விலங்குகளிடமும் நடந்து கொள்ள வேண்டும்" என்கிறார் உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர் எல்ஸ் ப்ரோயென்ஸ்.
"உண்மையில் விலங்குகளின் உடல்நலம் மட்டுமே இங்கு முக்கியமானதல்ல. வளர்ப்பு விலங்குகள் கொரோனா வைரஸை தேக்கி வைக்கும் மையமாக மாறி, பின்னர் மனிதர்களுக்கு அதைப் பரப்பும் ஆதாரமாக மாறிவிடுமா என்பதுதான் இப்போது கவலைக்குரியது"
டெல்டா பிளஸ் திரிபு: கொரோனா மூன்றாம் அலையை தடுக்குமா இந்தியா?
இரு வேறு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் உடலில் என்னாகும்?
ஆனால் வளர்ப்பு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவுமா என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என இந்த ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உரிமையாளர்களிடம் இருந்து கொரோனா தொற்று ஏற்பட்ட விலங்குகளுக்கு பெரும்பாலும் அறிகுறிகள் ஏதுமில்லை. சிலவற்றுக்கு லேசான அறிகுறிகள் தென்படுகின்றன.
கொரோனா பாதித்தவர்களின் வீடுகளுக்கு விலங்குகள் சிகிச்சைக்கான வாகனத்தை அனுப்பி கடந்த 200 நாள்களாக உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளிடம் இருந்து சளிமாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆன்டிபாடி சோதனைக்காக விலங்குகளிடம் இருந்து ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவுகள் ஐரோப்பாவின் நுண்ணுயிரியல் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி 4.2 சதவிகித விலங்குகளுக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர 17.4 சதவிகித விலங்குகளின் உடலில் ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பான்கள் உருவாகியிருந்தன.
அதன் பிறகு சில நாள்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் விலங்குகளிடம் இருந்து கொரோனா தொற்று மறைந்து, அவற்றின் உடலிலும் எதிர்ப்பான்கள் தோன்றியிருந்தன.
இந்த விலங்குகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் மூலமாகவே தொற்று ஏற்பட்டிருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
வாகனம்
பட மூலாதாரம்,UNIVERSITY OF UTRECHT
அதே நேரத்தில் வளர்ப்பு விலங்குகளிடம் இருந்து கொரோனா தொற்று அதன் உரிமையாளர்களுக்கு பரவுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
"விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூற முடியாது" என்கிறார் விலங்குகளுக்கான நுண்ணுயிர் பரிசோதனை மையத்தைச் சேர்ந்த ப்ரோயென்ஸ்.
"இப்போதைக்கு மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதன் மூலமாகவே பெருதொற்று ஏற்பட்டு வருகிறது. அதனால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவதை நம்மால் கண்டறிய முடியவில்லை" என்கிறார் அவர்.
ரஷ்யாவில் விலங்குகளுக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் நடைமுறையை மருத்துவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட தேவைக்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்கிறார் ப்ரோயென்ஸ்.
கொரோனா பெருந்தொற்று பரவுவதில் விலங்குகளுக்குப் பங்கிருப்பதற்கான முகாந்திரம் இல்லை என்கிறார் அவர்.
கனடாவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் உரிமையாளருடன் ஒரே படுக்கையில் படுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தமாக 77 வீடுகளில் 48 பூனைகள் மற்றும் 54 நாய்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோனை செய்யப்பட்டது.
இவற்றில் 67 சதவிகித பூனைகளுக்கு 43 சதவீத நாய்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
அதே நேரத்தில் விலங்குகள் காப்பகத்தில் இருந்த 9 சதவிகித விலங்குகளுக்கே கொரோனோ தொற்று இருந்தது. தெருவில் சுற்றும் பூனைகளில் வெறும் 3% பூனைகளுக்கு மட்டும் தொற்று இருந்தது.
இவற்றில் பெரும்பாலான விலங்குகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டன. நாய்களைவிட பூனைகள் அதிகமாக உரிமையாளர்களுடன் தூங்குவதால் அவற்றுக்கு அதிக பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகிறார்கள்.
வண்டலூர் சிங்கங்களுக்கு, கொரோனா தவிர கேனைன் டிஸ்டம்பர் தொற்று கண்டுபிடிப்பு
காண்டாமிருகத்தின் காதல் பயணம்: தைவானில் இருந்து ஜோடி தேடி ஜப்பான் சென்றது
இவ்விரு ஆய்வு முடிவுகளையும் இணைத்துப் பார்க்கும்போது உரிமையாளர்களிடம் இருந்து அவர்களின் செல்லப் பிராணிகளுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விலங்கு மருந்தியல் துறைத் தலைவர் ஜேம்ஸ் உட் கூறுகிறார்.
"அதே நேரத்தில் நாய்களிடம் இருந்தோ பிற விலங்குகளிடம் இருந்தோ மனிதர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்றே தோன்றுகிறது"
Post a Comment
Post a Comment