அம்பாரை மாவட்டத்தில் உழுந்து அறுவடை




 


சுகிர்தகுமார் 0777113659 


 அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக உள்நாட்டிலும் மேட்டுநில பயிர்ச்செய்கையான உழுந்து செய்கையினை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலத்தில் வவுனியா மாவட்டத்தில் அதிகளவாக மேற்கொள்ளப்பட்ட உழுந்து செய்கையானது அதிக விளைச்சல் மற்றும் உயர்ந்த விலை காரணமாக தற்போது அம்பாரை மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அம்பாறை  மாவட்டம்  திருக்கோவில் சாகாமம் பிரதேசத்தில் உழுந்து செய்கை மேற்கொண்ட விவசாயி ஒருவர் இன்று முதல் முறையாக அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை மேற்கொண்டதுடன் சிறந்த விளைச்சலையும் பெற்றுக்கொண்டார்.
கோடை காலத்தில் மேற்கொள்ளும் உழுந்து செய்கையில் மஞ்சள் நிறதாக்கம் அதிகரித்து காணப்படும் எனவும் கடந்த மார்ச் மாதம் 19 ஆம்திகதி முன்னர் மேற்கொண்டதால் தாக்கம் ஏற்படவில்லை எனவும் கூறிய அவர் 3 ஏக்கரில் உழுந்து பயிர் செய்கையை மேற்கொண்டதாகவும் அதற்கான அறுவடையே இன்று அறுவடை இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
 இதேநேரம் அறுவடை உள்ளிட்ட செலவுடன் 3 ஏக்கருக்குமான செலவு சுமார் ஒரு இலட்சம் ரூபா மொத்தமாக ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த விவசாயி கே.சுஜீவன்
விவசாயம் செய்ய இயலாத மேட்டு நிலத்தில் செய்யக்கூடிய வரட்சி நில பயிர்தான் உழுந்து எனவும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யாமல் நமது நாட்டிலே பயிர் செய்து தன்னிறைவு காணவேண்டும் என்பதே எனது இலக்கு எனவும் தெரிவித்தார்
அத்தோடு எதிர்காலத்தில் தானும் இதனை விஸ்தரிக்க அரசாங்கத்தின் உதவியினையும் கடன் உதவியினையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் அறுவடை செய்யும் ஒரு கிலோ கறுப்பு உழுந்தை 600 ரூபா தொடக்கம் 700 வரை விற்கமுடியும் எனவும் தீட்டிய உழுந்தை ஒரு கிலோ 1400 ரூபாவுக்கு விற்கமுடியும் எனவும் கூறினார்.
தற்போதைய அறுவடையின் நிறைவில் சுமார் 1000 கிலோ உழுந்து கிடைத்துள்ளதாகவும் இதன் மூலம் இலாபத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆயினும் கடந்த வருடம் அறுவடை மனிதவலுவினால் அறுவடை மேற்கொண்டதால் அதிக இலாபம் பெற முடியாமல் போனதாகவும் தம்பிலுவில் கமநல சேவைத்திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய இம்முறை இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர் இதன் மூலமே அதிக இலாபம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.