பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுநோயால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் Covid- 19 கொரோனா தொற்றாளர்களின் விபரங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில்,
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரைதீவு மாவடிப்பள்ளியை சேர்ந்த நபர் ஒருவரும் சாய்ந்தமருதை சேர்ந்த நபரொருவரும் என இரு நோயாளிகள் கடந்த செவ்வாய்க்கிழமை(22) மரணமடைந்துள்ளனர். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இரு நோயாளிகளே இவ்வாறு மரணமடைந்தவர்கள் ஆவர். கொரோனா தொற்றின் காரணமாக இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். 274 கொரோனா தொற்றாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்முனைப் பிராந்தியத்தில் தற்போது நாளுக்குநாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றன. கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 37 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். உயிரிழப்புக்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டுமாக இருந்தால் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடிப்பது அவசியமாகும்.
முதலாவது அலையில் இரண்டு தொற்றாளர்கள் மாத்திரம் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் அலையில் 1468 தொற்றாளர்களும், மூன்றாவது அலையில் 821 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை 18893 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் 25397 நபர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த நிமிடத்தில் மட்டும் கல்முனை பிராந்தியத்தில் 300 இற்கு அதிகமான கொவிட்-19 நோயாளர்கள் இருக்கின்றார்கள்.
அவர்களுடன் நேரடி தொடர்புபட்ட 1000 இற்கு அதிகமானவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு மிக அருகில் இருக்கும் நண்பருக்கோ, உறவினருக்கோ, வீதியில் நிற்பவருக்கோ, முன்னால் நீங்கள் கதைத்து கொண்டு இருப்பவருக்கோ கொரோனா தொற்று இருக்க முடியும்
எனவே மக்கள் சுகாதார பொறிமுறைகளை மிக இறுக்கமாக கைக்கொள்ளுமாறும் சமூக இடைவெளி, முக்கவசம், கைச்சுகாதாரம் என்பவற்றை பேணுவது அவசரமானது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment
Post a Comment