நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம்





 (க.கிஷாந்தன்)

அமைச்சர் கம்பன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தியின் பணிப்பாளரும், கொவிட் தடுப்பூசி செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி இதனை கூறியுள்ளார்.

கொவிட் -19 தடுப்புக்கான 2ம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி கண்டி மாவட்டத்தில் இன்று (20.06.2021) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

இதன்படி  கண்டி மாநகர சபை, பஸ்பாகே கோரளை மற்றும் பஹத்ததும்பர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அதனடிப்படையில் பெருந்தோட்ட பகுதிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்டது. அந்தவகையில், விக்டன் தோட்டம், டெம்பள்ஸ்டோவ் தோட்டம், ஐட்றி தோட்டம், வெஸ்டோல் தோட்டம், பார்கேபல் தோட்டம், பாரன்டா தோட்டம், கடியன்சேனை பகுதி, போகீல் தோட்டம், நாவலப்பிட்டியில் உள்ள பல பகுதிகளிலிருந்து வந்திருந்த 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1700 பேர் வெஸ்டோல் தமிழ் வித்தியாலயத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.

இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அங்கு சென்றிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி மேற்படி விடயத்தை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்...

'இ.தொ.காவின் கோரிக்கைக்கு அமைய மலையக பெருந்தோட்ட பகுதிகளிலும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாகவே நாவலப்பிட்டி வெஸ்டோல் தோட்டத்தில் தடுப்பூசி செலுத்தும், பணிகள் இடம்பெறுகின்றன. ஆகவே 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மற்றது அமைச்சர் கம்பன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் உள்ளது. ஆகவே எதிர்க் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தை பாதிக்காது. இது வெறுமனே அரசியலை நோக்கமாக கொண்டது.

தற்போதைய அரசாங்கம் மக்கள் நலன்சார் விடயங்களில் அதிக அக்கறையுடன் செயற்படுவதை மக்கள் அறிவார்கள். எரிப்பொருள் விலையேற்றம் குறித்து அரசாங்கம் குறிப்பாக பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார். விரைவில் இதுகுறித்து சாதகமான முடிவு கிடைக்கும்.

அரசாங்கம் மக்களுக்கானது என்பதால் அரசாங்கத்திற்குள் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை. தற்போதைய நிலையில் உலக நாடுகள் சில பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. ஆனால் எமது அரசாங்கம் வெற்றிகரமாக செயற்படுகின்றது. ஆகவே ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட கருத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல.

அண்மையில் ஏற்பட்ட கப்பல் தீ பரவல் திட்டமிட்ட செய்யப்பட்டதல்ல. அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் கடல் வளத்தை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது. கப்பல் விபத்து தொடர்பில் கப்பல் கெப்டன் உள்ளிட்ட கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும், அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை' என்றார்.