கிரேக்க நகரமான ஒலிம்பியாவில், கி.மு. 776-ம் ஆண்டு முதல் கி.மு. 393-ம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. ரோமாபுரியைச் சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடைசெய்யப்பட்டது. இந்தப் போட்டியானது, 1894-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி நவீன வடிவம் பெற்று, ஒலிம்பிக் போட்டியாக மாறியது. இதனை ஒருங்கிணைத்தவர், பியரி டி கூபர்டின். இவரே ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவரும் இவர்தான்.
முதல் நவீன மயமான ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டியானது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 1924-ம் ஆண்டு முதல் குளிர் கால ஒலிம்பிக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியானது, ‘கோடைகால ஒலிம்பிக் போட்டி’ என்று அழைக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு வரை கோடைகால ஒலிம்பிக் போட்டியும், குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் ஒரே ஆண்டில்தான் நடத்தப்பட்டன. அதன்பிறகான காலங்களில், இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு போட்டிகளும் மாற்றியமைக்கப்பட்டன. அதாவது கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும்.
இதுவரை 31 ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரமாக லண்டன் விளங்குகிறது. 32-வது ஒலிம்பிக் போட்டி கடந்த 2020 ஆண்டு ஜப்பானில் நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால் உலக அளவில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விளையாட்டு போட்டி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ளது. கடந்த காலங்களில், உலகப் போர்களின் காரணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய மூன்று ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.
1948-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டபோது, ஒலிம்பிக் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள தகுதியான அனைவரும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை முன்னெடுத்துச் செல்லும் விதமாக இந்தத் தினம் அறிமுகம் செய்யப்பட்டது,
அதன்பின் ஒலிம்பிக் தினம் அன்று ஒலிம்பிக் ஓட்டம் கடந்த 20 ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது தேசிய ஒலிம்பிக் கமிட்டியில் இருந்து 45 நாடுகள் 1987-ல் பங்கேற்றன. தற்போது 205 நாடுகளில் ஒலிம்பிக் ஓட்டம் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது ஒலிம்பிக் தினம் அன்று விளையாட்டு, கலாச்சாரம், கல்வி போன்றவற்றை கற்றுக் கொடுக்க ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளில் நடத்தப்படும் கோலாகலமான விழா, 1908-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. ஒலிம்பிக் தீபம், முதன் முதலில் 1928-ம் ஆண்டு ஆம்ஸெடர்டம் என்பவரால் ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும். பின்னர் பல நாடுகளில் பல வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு, ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நாளன்று, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைய அரங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஒலிம்பிக் கொடியில் மொத்தம் ஆறு வண்ணங்கள் இருக்கும். வெள்ளை நிறத்தைப் பின்புலமாகக் கொண்ட கொடியின் மீது ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து நிறங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும் இந்த வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன. இந்தக் கொடி 1920-ம் ஆண்டு தான் முதல் முதலாக பறக்கவிடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், நவீன ஒலிம்பிக் போட்டி உருவாக்கப்பட்ட நாளான ஜூன் 23-ந் தேதியை, ‘உலக ஒலிம்பிக் தினம்’ என்று அனைவரும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
Post a Comment
Post a Comment