மும்பை:
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடக்கிறது.
இதில் வீராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் விளையாடுவதற்காகவும், இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுவதற்காகவும் இந்திய அணி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.
3-ந் தேதி சவுத்தம்டன் சென்றடையும் இந்திய வீரர்கள் அங்குள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஏற்கனவே வீரர்கள் மும்பையில் 14 நாட்கள் தனிமையில் இருந்தனர். இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும்.
இங்கிலாந்து சென்றடைந்ததும் இந்திய வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதோடு தனிமைப்படுத்தலின் போதும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் எத்தனை நாட்கள் தனிமையில் இருப்பார்கள் என்பது தெரியவில்லை. நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்து விட்டது.
அந்த அணி உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு இங்கிலாந்துடன் 2 டெஸ்டில் ஆடுகிறது. முதல் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது.
நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஆடிய பிறகு வீராட் கோலி அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.
முதல் டெஸ்ட் நாட்டிங் காமிலும் (ஆக 4-8), இரண்டாவது டெஸ்ட் லண்டனிலும் (ஆக12-16), மூன்றாவது டெஸ்ட் லீட்சிலும் (ஆக 25-29), நான்காவது டெஸ்ட் லண்டனிலும் ( செப் 2-6), ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டரிலும் (செப் 10-14) நடக்கிறது.
இரு அணிகள் இடையே கடைசியாக கடந்த பிப்ரவரி மார்ச் மாதம் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான 20 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் வருமாறு:-
வீராட் கோலி (கேப்டன்), ரகானே ( துணை கேப்டன்), ரோகித்சர்மா , சுப்மன் கில், புஜாரா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், விகாரி, விருத்திமான் சகா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர்.
Post a Comment
Post a Comment