ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும்,5000 கொடுப்பனவு




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  கொவிட் 19 பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வதாரத்தின் பொருட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் திட்டம் இன்று தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார புத்தெழிச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் சுற்று நிருபத்திற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களும் இக்கொடுப்பனவை பெற்று வருகின்றனர்.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக  சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்கப்படும் இப்பணம் ஆறு கட்டங்களாக சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்கப்படவுள்ளது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் கண்காணிப்பின் கீழ் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரனின் வழிகாட்டலில் இன்று சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் ஆலையடிவேம்பு தெற்கு வங்கி முகாமையாளர் கே.அசோக்குமார்,  கருத்திட்ட முகாமையாளர் என்.சுரேஸ்காந், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கொடுப்பனவை பெறும் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 6880 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 3 கோடியே 44 இலட்சம் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தொகை ஆலையடிவேம்பு தெற்கு மற்றும் வடக்கு வங்கிகளின் மூலமும் நடமாடும் வங்கிச்சேவை மூலமும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

இக்கொடுப்பனவின் முன்னராக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தொற்று நீக்கி மருந்துகள் மற்றும் முகக்கவசங்கள் சமுர்த்தி வங்கியால் வழங்கி வைக்கப்பட்டதுடன் மக்களுக்கான பணமும் கையளிக்கப்பட்டது.

இதனை பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்கள் பிரிவு ரீதியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வீடுகளுக்கு சென்று பணத்தை ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இக்கொடுப்பனவை தொடர்ந்து சமுர்;த்தி பெற தகுதியானவர்கள் தொழில் பாதிப்பு சிரேஸ்ட பிரஜைகள் நோய்பாதிப்புக்குள்ளானவர்கள் உபகுடும்பம் மற்றும் மேன்முறையீட்டின் மூலம் பெறுகின்றவர்கள் என அனைவருக்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.