கங்கனாவின் கணக்கு முடக்கப்பட்டது




 


பாலிவுட் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களில் கதாநாயகியாக விளங்கி தனக்கென தனி வழியை பின்பற்றி வரும் கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு நிர்ந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகலில் ட்விட்டர் நிறுவனம் கங்கனா ரனாவத்தின் பக்கத்தை முடக்கியது.ஆட்சேபகர கருத்துகளை அவர் பதிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை கங்கனா பதிவிட்டிருந்தார்.

அதில் ஒரு சில இடங்களில் கண்களில் நீர் ததும்ப பேசிய கங்கனா, "மேற்கு வங்கத்தில் மக்கள் கொல்லப்படுகிறார்கள், கூட்டுப்பாலியலுக்கு ஆளாகிறார்கள், வீடுகள் தீக்கிரையாவது போன்ற காணொளிகள், படங்கள் வருவதை பார்த்து மகிவும் சங்கடப்படுகிறேன்," என்று கூறினார்.

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

"மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்," என்று கங்கனா வலியுறுத்தினார்.

சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளியில், மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை காட்சிகளை பிபிசி, டெலிகாஃப், டைம், கார்டியன்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்கள் காண்பிப்பதில்லை... இதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? என்றும் கங்கனா கேள்வி எழுப்பியிருந்தார்.

என்ன சர்ச்சை கருத்து?

ட்விட்டர்

பட மூலாதாரம்,TWITTER

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. அந்த சம்பவத்தை விமர்சித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட கங்கனா, பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரி போன்றவற்றில் வன்முறை ஏற்படவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் ஏற்படுகிறது. அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோதி தமது சாட்டையைக் கொண்டு மமதாவை ஒடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், ஒரு அடாவடித்தனத்தை ஒடுக்க அதை விட மிகப்பெரிய அடாவடித்தனம் செய்ய வேண்டும். மோதி ஜி.. உங்களுடைய சூப்பர் முகத்தை காட்டுங்கள் என்று கங்கனா கூறியிருந்தார். இது தவிர வேறு சில ஆட்சேபகர கருத்துகளையும் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அவரது கருத்துக்கு சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பரவலாக எதிர்ப்பும் ஆதரவையும் தெரிவித்தனர். சிலர் கங்கனா ரனாவத்தை முடக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்தை வலியுறுத்தி ஹேஷ்டேக் போட்டு பல்வேறு கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்த நிலையில், ஆபத்தை விளைவிக்கக் கூடிய கருத்துகளை வெளியிடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எங்களுடைய கொள்கைக்கு இணங்க, கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய வெறுப்புணர்வுக்கு எதிரான கொள்கையின்படி எந்தவொரு தனி நபரை இலக்கு வைத்து துன்புறுத்தும் வகையிலோ மக்களைத் தூண்டும் வகையிலோ கருத்து வெளியிட்டால் அவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். அது எல்லோருக்கும் பொருந்தும் என்று ட்விட்டர் நிறுனம் தெரிவித்துள்ளது


சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் கங்கனா

மகாராஷ்டிராவில் ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக ஆகட்டும், விதி மீறல் சர்ச்சையில் தனது மும்பை வீடு இடிக்கப்பட்ட விவகாரமாகட்டும், எதற்கும் அச்சப்படாமல் துணிச்சலுடன் சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதில் சளைத்தவர் அல்ல கங்கனா ரனாவத்.

மும்பையில் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் விடுதி அறையில் இறந்து கிடந்த சம்பவத்தை எதிர்த்து வெளிப்படையாக குரல் கொடுத்த கங்கனா, அவரது சாவில் மர்மம் உள்ளதாகக் கூறி சர்ச்சையை எழுப்பினார்.

மும்பை பாலிவுட் திரையுலகுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து சுஷாந்த் சிங் வழக்கு, பாலிவுட் போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டு விவகாரத்தில் அவர் சிபிஐ மற்றும் போதைப்பொருள் தடுப்புத்துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா, இந்திய அரசியல் போன்றவற்றை கடந்து சில நேரங்களில் தமிழக உள்ளூர் விவகாரங்களிலும் கங்கனா தலையிட்டு கருத்துகளை பதிவிடுவார். அவர் சமீபத்தில் கவனம் செலுத்தியது மேற்கு வங்க தேர்தல் தொடர்புடையது.

தமது சமூக ஊடக பக்கம் வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கங்கனா, வெளிப்படையாகவே மோதியின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் ஆதரிப்பார். அவரது சர்ச்சை கருத்துகள், அரசியல் ரீதியாக எதிர்க்கப்படும் வேளையில், அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.