தொழுகைக்கு பின் இஸ்ரேல் - பாலத்தீன தரப்பு மோதல்




 


ஜெருசலேமில் வெள்ளியன்று நடந்த மோதல்களில் குறைந்தது 163 பாலத்தீனர்களும், ஆறு இஸ்ரேலிய காவல் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன மருத்துவர்களும் இஸ்ரேலிய காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் அல்-அக்சா மசூதியில் நடந்த மோதலில் காயமடைந்துள்ளனர்.

அங்கு இஸ்ரேலிய காவல்துறையினர் பாலஸ்தீன தரப்பினரை நோக்கி ரப்பர் குண்டுகள் மட்டும் மற்றும் 'ஸ்டன் கிரனேடுகளை' வீசினர். பாலத்தீனர்கள் இஸ்ரேலிய காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினர்.

யூத குடியேறிகள் தங்களுடையது என்று கூறும் நிலத்திலிருந்து பாலத்தீனர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதை தொடர்ந்து அங்கு சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது.

'ரெட் க்ரசென்ட்' (செம்பிறை) அமைப்பு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கள மருத்துவமனை ஒன்றை திறந்துள்ளது.

ஜெருசலேம் பழைய நகரில் உள்ள அல்-அக்சா மசூதி வளாகம் இஸ்லாமியர்கள் மிகவும் போற்றும் புனித தலங்களில் ஒன்றாக உள்ளது. அது யூதர்களுக்கும் ஒரு புனித இடமாக விளங்குகிறது. இந்த வளாகத்தை அவர்கள் 'டெம்பிள் மவுண்ட்' என்று அழைக்கின்றனர். இந்த இடம் அடிக்கடி இருதரப்பு வன்முறை நிகழும் இடமாக இருக்கிறது

    இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை அனுசரிக்க ஆயிரக்கணக்கானவர்கள் நேற்றிரவு அங்கு கூடிய பின்பு இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடங்கின.

    மாலை நேர தொழுகைக்கு பின்பு "ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் நிலைமையை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர" தாங்கள் பலப்பிரயோகம் நடத்தியதாக இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிகழ்வின்போது அல்-அக்சா மசூதியின் நிர்வாகி ஒருவர் இந்த மசூதியின் ஒலிபெருக்கிகள் வாயிலாக அமைதியை கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    அல் அக்சா மசூதி அருகே இஸ்ரேலி போலீஸ் கையெறி குண்டுகளை வீசியதற்கு எதிர்வினையாற்றும் பாலத்தீனர்கள்.

    பட மூலாதாரம்,REUTERS

    "காவல்துறையினர் தொழுகையாளிகள் மீது ஸ்டன் கிரனேடுகளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; இளைஞர்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும்," என்று அல்அக்சா மசூதியின் அதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாகக் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

    ரப்பரால் மூடப்பட்ட உலோகப் புல்லட்டுகள் மூலம் தாக்குதலுக்கு உள்ளான 88 பாலத்தீனர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாலத்தீன செம்பிறை அவசர சேவை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்த ஆறு அதிகாரிகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது என்று இஸ்ரேலிய காவல்துறையும் தெரிவிக்கிறது.

    ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் இருந்து பாலத்தீன குடும்பங்கள் வெளியேற்றப்படும் என்ற அச்சுறுத்தலுக்கு பிறகு பதற்ற நிலை அதிகரித்து வந்ததால் சர்வதேச சமூகமும் பதற்றத்தை தணிக்க வெள்ளியன்று கோரிக்கை விடுத்தது.

    பதற்றம் அதிகரிப்பது குறித்து தாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெள்ளியன்று தெரிவித்தார்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 1

    Twitter பதிவின் முடிவு, 1

    ஐநாவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமைதி நடவடிக்கை சிறப்பு ஒருங்கிணைப்பாளர் தோர் வென்ஸ்லேண்ட் அமைதி மற்றும் நிலைத் தன்மையை கருத்தில் கொண்டு, ஜெருசலேம் பழைய நகரில் இருக்கும் புனிதத் தலங்களில் ஏற்கனவே இருக்கும் நிலையை மதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துவதாக கூறினார்.

    பாலத்தீனர்களை வெளியேற்றுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக பலப்பிரயோகம் செய்வதை இயன்றவரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் இஸ்ரேல் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலம் தொடர்பான நீண்ட கால வழக்கு ஒன்றை திங்களன்று இஸ்ரேலிய உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

    1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின்பு கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஜெருசலேம் நகரம் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் பலவும் இதை அங்கீகரிக்கவில்லை.

    எதிர்காலத்தில் அமையக் கூடும் என்று தாங்கள் நம்பும் சுதந்திர நாட்டுக்கு கிழக்கு ஜெருசலேம் தான் தலைநகராக அமையும் என்று பாலத்தீனர்கள் கூறுகிறார்கள்.