ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஏழு சிறார்களும் ஒரு ஆசிரியரும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள்.
தலைநகர் மாஸ்கோவுக்கு கிழக்கே 820 கி.மீ தூரத்தில் உள்ளது கசான் நகரம். அங்குள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக ஒரு பதின்ம வயது நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எந்த நோக்கத்துக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
டாடர்ஸ்டான் பிராந்திய தலைவர் ருஸ்தாம் மின்னிகானொஃப், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை பேரிடர் மற்றும் துயரமான சம்பவம் என்று அழைத்துள்ளார்.
175 என்ற எண் கொண்ட அந்த பள்ளி முன்பாக ஆயுதமேந்திர காவல்துறையினரும் அவசர ஊர்தி வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், ஜன்னல்கள் வழியாக பள்ளிக்குள் இருந்த சில சிறார்கள் குதித்து தப்பி ஓடுவதும் சிலர் அந்த முயற்சியில் விழுந்து காயம் அடைவதும் சிலர் வெளியேற்றப்படுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தொடக்கத்தில் அந்த பள்ளிக்குள் இரண்டு துப்பாக்கிதாரிகள் இருந்ததாகவும் அதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால், அதை பின்னர் மறுத்த அதிகாரிகள், தாக்குதலில் ஒரேயொரு சந்தேக நபரே ஈடுபட்டதாக கூறுகின்றனர்.
சம்பவ பகுதியை பார்வையிட்ட டாடர்ஸ்டான் தலைவர் மின்னிகனொஃப் பள்ளிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், "உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி மேலும் 12 சிறார்கள், நான்கு பெரியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்று கூறினார்."அந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளவர்," என்று மின்னிகனொஃப் தெரிவித்தார்.
Twitter பதிவின் முடிவு, 1
ஒரு காணொளியில் கட்டடம் ஒன்றுக்கு வெளியே பதின்ம வயது நபர் தரையில் படுக்க வைக்கப்பட்டு அவரை காவல்துறையினர் தடுத்து வைத்திருப்பதும் பிறகு அவரை காவலர்கள் பிடித்துச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
டாடர்ஸ்டான் எங்கு உள்ளது?
டாடர்ஸ்டான் பிராந்தியம் கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வெவ்வேறு குழுவினரின் வாழ்விடமாக அது விளங்கியது. காலப்போக்கில் அங்கு வோல்கா டாடர் இனவாத குழுவினர் குடியேறினர். 15ஆம் நூற்றாண்டில் கசான்களின் ஆளுகையை இவான் தி டெரிபிள் படை ஆக்கிரமித்து 200 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியது. அப்போதுதான் பெருமளவிலான ரஷ்யர்கள் அங்கு குடியேறினர். அது பூர்விகமாக அங்கு வாழ்ந்து வந்த டாடர் இனவாத குழுக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 18,19ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்துறை வளர்ச்சி பெற்று ரஷ்யர்களுக்கு இணையாக டாடர்ஸ்டான்கள் வளர்ந்தனர். 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு தனி ஆளுகையாக டாடர்ஸ்டான் அறிவித்துக் கொண்டபோது, அதை ஏற்காத சோவியத் அரசு பல ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போர் முடிவில் டாடர் சுயாதீன பகுதியை தங்களின் ஆளுகைக்கு கீழ் உள்ள பிராந்தியமாக அறிவித்தது. 1991இல் சோவியத் பிளவுபட்ட பிறகு, சுதந்திர குரல்கள் ஒலித்தன. ஆனாலும் 1994இல் ரஷ்யாவின் ஆளுகைக்கு உள்பட்ட சுயாதீன பிராந்தியமாக டாடர்ஸ்டான் அறிவிக்கப்பட்டது. 2008இல் டாடர்ஸ்டான் பிராந்தியம் தன்னை சுதந்திர குடியரசாக அறிவித்துக் கொண்டாலும், அதை ஐ.நா சபையோ, ரஷ்ய அரசோ ஏற்கவில்லை.
Post a Comment
Post a Comment