மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முதல் 5 உத்தரவுகள்





 தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதலில் 5 முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

கொரோனா அலை பரவும் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மே மாதமே ரூ.2 ஆயிரம் வழங்கவும், பால் விலை லிட்டருக்கு 3 குறைத்து மக்களுக்கு விற்பனை செய்யவும்,

தமிழ்நாடு முழுவதும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கவும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் மக்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் அவர்களது சிகிச்சைக் கட்டணத்தை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசே ஏற்கவும் இந்த உத்தரவுகள் வழி செய்கின்றன.

உத்தரவுகளின் முழு விவரம்:

முதல் அரசாணை

பட மூலாதாரம்,DIPR/GOTN

முதல் அரசாணை

பட மூலாதாரம்,DIPR/GOTN

கையெழுத்திட்ட ஐந்து அரசாணைகள் என்ன?

1. கொரோனா கால பொருளாதார நெருக்கடியை மக்கள் சமாளிக்க உதவும் வகையில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 4,000 ருபாய் வழங்கும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல் தவணையாக 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதமே ரூ.2 ஆயிரம் வழங்கும் உத்தரவில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். இதனை நிறைவேற்ற அரசுக்கு 4,153 கோடி ரூபாய் செலவு பிடிக்கும்.

2. ஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்யப்படும். இந்த விலை குறைப்பு 16 மே 2021 முதல் அமலுக்கு வரும்.

3. தமிழ்நாடு முழுவதும் இயங்கும் அரசின் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் எல்லாப் பெண்களும் கட்டணமில்லாமல், பேருந்து பயண அட்டை இல்லாமல் நாளை முதல் பயணம் செய்யலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவான 1,200 கோடி ரூபாயை, அரசு மானியமாக வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தேர்தல் பரப்புரையின்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தங்கள் பிரச்சனை தொடர்பாக மக்களிடம் மனுக்களைப் பெற்ற மு.க.ஸ்டாலின் இந்த மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படும்.

5. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறவர்களின் சிகிச்சைக் கட்டணத்தை மாநில அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்க ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார்.