டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரம்,அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து




 


அமெரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது கலவரக் காரரர்கள் அவையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததால், ஜன்னலை நோக்கி துப்பாக்கியைத் திருப்பிய அதிகாரிகள்.


அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.


தேர்தல் சபை உறுப்பினர்கள் செலுத்திய வாக்குகள் சீலிட்ட கவர்களில் வந்து சேர்ந்து அவை புராதன மகாகனி மரப்பெட்டிகளில் வைத்து கேப்பிட்டல் கட்டடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இந்த கலவரம் நடந்துள்ளது.


இந்தக் கலவரம் காரணமாக அந்த வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.


இந்தக் கலவரத்தில் ஊடகங்கள் தாக்கப்பட்டன.


இதையடுத்து வாஷிங்டன் டிசி-யில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கலவரத்தை தொடர்ந்து தனது ஆதரவாளர்களைத் திரும்பிப் போகும்படி டிரம்ப் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அகற்றியுள்ளன. அந்த வீடியோவில் ஆதரவாளர்களை திரும்பிப் போகச் சொல்லும் அதே நேரம், அவர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரமில்லாமல் மீண்டும் குற்றம்சாட்டினார்.


டிவிட்டர் டிரம்பின் கணக்கை 12 மணி நேரத்துக்கு முடக்கி வைத்துள்ளது.


முன்னாள் அதிபரும் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.