மூத்த பத்திரிக்கையாளரும், "இலட்டு" என்ற மாத பத்திரிகையின் ஆசிரியருமான திரு. இக்பால் அவர்கள் திடீர் உடல் நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், மிகுந்த வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் "போர்வாளாம்" முரசொலி நாளிதழில் அச்சுக்கோர்ப்பவராக பணியில் சேர்ந்த அவர் திராவிட இயக்கக் கொள்கைகள் மீது இணையற்ற பிடிப்பும், பற்றும் வைத்திருந்தவர். முத்தமிழறிஞர் கலைஞரின் மீது தனி மதிப்பும் மரியாதையும் காட்டிய அவர் -1977ல் இருந்து "இலட்டு" என்ற மாதப்பத்திரிகையைத் துவங்கி நடத்தி வந்தார். அதனாலேயே அவர் அனைவராலும் "இலட்டு இக்பால்" என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். 44 ஆண்டுகளாக - தன்னந்தனியாக ஒரு பத்திரிகையை நடத்துவது சாதாரண காரியம் அல்ல. ஆனால், அப்படி பத்திரிகையை நடத்தி - சாதித்துக் காட்டிய திரு. இக்பால் இதழியல் துறையின் மீது தணியாத ஆர்வம் கொண்டவர்.
சிறுபான்மையின சமுதாயத்தின் குரல்களை - திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் மன்றத்திற்குத் தங்குதடையின்றி - தொய்வின்றிக் கொண்டு சென்ற திரு. இக்பால் என் மீது தனி மரியாதை வைத்திருந்தவர். அவர் இப்போது மறைந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் மறைந்தாலும்- அவருடைய ஏற்றமிகு நடையில் வெளிவந்துள்ள எழுத்துகளும், கருத்துகளும் என்றென்றும் தமிழக மக்களிடம் - குறிப்பாக இதழியல் வாசகர்களிடம் நீடித்து நிலைத்து நிற்கும் என்று கூறி - திரு இக்பால் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இதழியல் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment
Post a Comment