தேயிலை மலைக்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து




 


(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வகந்த தோட்ட தேயிலை மலைக்கு குப்பைக்  கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று (06.01.2021) திகதி காலை  அட்டன் பொகவந்தலாவ பிரதான விதியில் சிறிபுர பிரதேசத்திற்கு திரும்பும் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவை பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்து குறித்த தேயிலை மலைக்கு பொகவந்தலாவை சிறிபுர பகுதியில் வசிக்கும் மக்கள் நாள் தோறும் தங்கள் வீடுகளில் சேரும் கழிவு பொருட்களை ஈவு இரக்கமின்றி தேயிலை மலைகளில் வீசி விட்டு சென்று விடுவதாகவும் இந்த கழிவு பொருட்களில் கண்ணாடி துண்டுகள் பெம்பஸ் உள்ளிட்ட பொருட்கள் காணப்படுவதாகவும் சில இடங்களில் மாணிக்கல் அகழப்பட்ட பாரிய குழிகள் காணப்படுவதாகவும் இதனால் தங்களது தொழிலினை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேனீர் இடைவேளைகளின் போது நிம்மதியாக தேனீர் கூட அருந்த முடியாத நிலை காணப்படுவதாகவும் இது குறித் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்ட  இடத்திற்கு நோர்வூட் பிரதேசசபையின் தலைவர்  மற்றும் சுற்றாடல் தொடர்பாக கடமை புரியும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் போது ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் தலைவருக்குமிடையில் காரசாரமான வாக்கு வாதங்கள் இடம்பெற்றன. தொழிலாளர்கள் தேயிலை மலைக்கு குப்பை போடுவதனை நிறுத்து வேண்டும் என்று பொலிஸாரிடமும் தலைவரிமும் கோரிக்கை விடுத்தனர். அதன் போது குப்பை போடுவதை கண்டால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள் அல்லது உரியவர்களை இனங்கண்டு சொல்லுஙகள் என்று பதிலளிக்கப்பட்டதனால் அங்கு அமைதியின்மை நிலவின.

அதனை தொடர்ந்து சிறிபுர பகுதியில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி கமாரா பொருத்தப்பட்டு கவனிப்பதாகவும் அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை கட்சி பேதமின்றி எடுப்பதாக தெரிவித்தனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.