ஸ்டாக்ஹோம்:
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அந்த பரிசை உருவாக்கினார். அவரது விருப்பப்படி சுவீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமிலும், அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் நார்வே தலைநகர் ஓஸ்லோவிலும் வழங்கப்படும்.
இதற்கான விழா ஆண்டுதோறும் டிசம்பர் 10-ந் தேதி நடக்கும். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு உலக உணவுத் திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நோபல் பரிசு வென்றவர்களுக்கு தனித்தனியாக அவர்களது சொந்த நாடுகளிலேயே பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் குரூக்குக்கு மாசச்சூசெட்சில் உள்ள அவரது வீட்டில் பரிசு வழங்கப்பட்டது.
வேதியியலுக்கான நோபல் பரிசை பிரான்சின் இமானுவேல் சார்பென்டெர், அமெரிக்காவின் ஜெனிபர் தவுத்னா ஆகியோர் வென்றனர்.
இதில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள சுவீடன் தூதரகத்தில் நடந்த எளிய விழாவில் இமானுவேல் சார்பென்டருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அதேபோல கலிபோர்னியாவின் பெர்கேலேவில் ஜெனிபர் தவுத்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதாரத்துக்கான பரிசை வென்ற பால் மில்கிரோம், ராபர்ட் வில்சன் ஆகியோர் கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவிலும் இயற்பியலுக்கான பரிசை ஆண்டரியாகெஸ் லாஸ் ஏஞ்சல்சிலும் பெறுகிறார்கள்.
ஒஸ்லோ நகரில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment