பிக்பாஸ் புகழ் லொஸ்லியா, இலங்கை திருகோணமலையில் உள்ள அவரது வீட்டில் சுயதனிமைப்படுததிக் கொண்டுள்ளார். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 22ம் தேதி லொஸ்லியா வருகை தந்ததாக அவரது நண்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு லொஸ்லியா தனது குடும்பத்தாரை சந்திப்பார் என அவரது நண்பர் கூறுகிறார்.
லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி காலமானார். அவருக்கு வயது 52. அவரது உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், லொஸ்லியாவின் தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இலங்கை வெளியுறவு அமைச்சின் ஊடாக அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கைக்கு வரும் லொஸ்லியாவின் தந்தையின் உடல், திருகோணமலையிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் வேளையில், வெளிநாட்டில் மரணம் அடைந்த லொஸ்லியாவின் தந்தையின் உடல் அவர்களின் தாயகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இதையொட்டி சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளின்படி மரியநேசனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்த லொஸ்லியாவின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.
லொஸ்லியாவும் மரியநேசனும்
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டு லொஸ்லியாவின் குடும்பம் வாழ்ந்து வந்தது.
யுத்த சூழ்நிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரை நோக்கி லொஸ்லியாவின் குடும்பம் பின்னரான காலத்தில் இடம்பெயர்ந்தனர்.
மிகவும் வறுமை நிலைமைக்கு மத்தியில் வாழ்ந்த மரியநேசன், குடும்பத்தின் கஷ்ட சூழ்நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடன், 2009ஆம் ஆண்டில் தொழில் வாய்ப்புக்களை தேடிஅவர் கனடா சென்றார்.
அப்போது லொஸ்லியா தனது இரண்டு சகோதரிகளுடனும், தாயின் அரவணைப்பிலும் இலங்கையிலேயே வாழ்ந்தார்.
லொஸ்லியாவின் தந்தை தனது உழைப்பில் குடும்பத்தை சிறந்ததொரு இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பல வருடங்களின் பின்னர் தனது தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அப்போதே அவருக்கு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென நிகழ்ச்சிக்குள் மரியநேசன் வருகை தந்து, லொஸ்லியாவை அவேசமாக திட்டிய காட்சி, ரசிகர்கள் மத்தியில் இன்றும் நினைவில் இருக்கும் ஒரு சம்பவமாக காணப்படுகிறது.
அந்த சம்பவமே, மரியநேசனை உலகறிய செய்தது.
அது தொடர்பான காட்சியில், "என்ன சொல்லி வந்த நீ... நான் உன்னை அப்படியா வளர்த்தேன்... கதைக்கக்கூடாது..'' என மரியநேசன், லொஸ்லியாவை பார்த்து கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்த திரைப்பட இயக்குநர் சேரன், அவரை சமாதானப்படுத்த முயற்சித்த காட்சிகள் இன்றும் நினைவிலிருந்து நீங்காதுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், அந்த சில நிமிடங்கள் மாத்திரமே, லொஸ்லியா, தனது தந்தை மரியநேசனை பார்த்துள்ளதாக அவரது நண்பர்கள் பிபிசி தமிழிடம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சென்னையில் இருந்த லொஸ்லியா பல வார முயற்சிக்குப் பிறகு தனது தாயகமான இலங்கைக்கு திரும்பியிருக்கிறார்.
Post a Comment
Post a Comment